ஒரு முறை வட்டார மாவட்ட தொடக்கக்கல்வி திட்டத்தினுடைய வட்டார மேற்பார்வையாளர் எங்களது பள்ளியினை பார்வையிட வந்திருந்தார்.
அப்போது சில மாணவர்கள் எழுத்து கூட்டி படிக்க சிரமப்பட்டனர். அவர் என்னிடம் அம்மாணவர்களின் ”அறிவுக்கண் திறக்காமலேயே இருக்கின்றது, அவைகளை திறந்து இவ்வுலகினை காணச்செய்ய வைக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு” என்றார்.
அவரது அறிவுரையை சிரமேற்கொண்டு குறைதீர் கற்பித்தலில் குறைவேகக்கற்றல் உடைய மாணவர்களுக்கென சிரத்தையெடுத்து அவர்களையும் மிதவேக கற்கும் மாணவர்களாக மாற்ற 100% முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டேன்.
தலைமை ஆசிரியர் கூட்டம் வட்டார தலைமையகமான தா.பழூரில் நடை பெரும்.அதில் கலந்து கொள்ள எங்களது தலைமை ஆசிரியர் திரு.சிவராமகிருஷ்ணன் அவர்கள் சென்று விட்டார்.அன்று முழுமையும் 5 வகுப்புகளையும் மகிழ்ச்சியுடன் மணவர்களோடு மணவர்களாக பாட்டு, விளையாட்டு, நாடகம், பாடம் என பள்ளிக்கூடமே கலைகட்டியது.
எங்களது பள்ளி நேரம் முடிந்த பிறகு , பள்ளி பூட்டப்பட்டு டிவிஎஸ் சேம்ப்பில்
கிளம்பி விட்டேன்.ஒரு 500 மீட்டர் தூரம் சென்றிருப்பேன் ஒரு மஹேந்திரா ஜீப் எனக்கு எதிரே வந்தது. அதில் உள்ளவரை நான் உற்று கவனித்தேன், எனக்கு பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மரியாதிக்குரிய திரு. ஸ்டீபன் பரமானந்தம் அவர்கள் இருந்தார். ஒஹோ...எங்களது பள்ளிக்குத்தான் செல்கின்றார் என எனது இருசக்கர வாகனத்தை பள்ளியை நோக்கி திருப்பினேன்.
அவர்களும் இறங்கி என்னை விசரித்தார்கள், பிறகுபள்ளியை திறக்கச்செய்து பள்ளி கடிகாரத்தினையும், அவரது கைக்கடிகாரத்தினையும் ஒப்பிட்டு நேரம் உங்களது பள்ளி கடிகாரத்தில் வேகமாக ஓடுகின்றது என்றார்.அதனை சரி செய்து கொள்ள வேண்டும் என்றார்.உள்ளே சென்று ஆசிரிய் வருகைப்பதிவேடு பார்வையிட்டு அதில் தலைமை ஆசிரியருக்கு மாற்றுப்பணி என்று குறிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அப்பொது நான் எங்கிருந்து வருகிறேன் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.பதிலலித்துக்கொண்டு இருந்தேன். அங்கே கூடிய ஊர் மக்கள், எங்கள் பள்ளி ஆசிரியரை எங்கும் மாற்றம் செய்து விடாதீர்கள் என்றனர். அதற்கு மா.தொ.க.அலுவலரோ உங்கள் ஆசிரியர் வெகு தூரத்தில் இருந்து வருகின்றார், அவரே மாறுதல் வாங்கிக்கொண்டு சென்று விடுவாரே தவிர, நான் ஒருபோதும் அவரை மாற்றம் செய்ய மாட்டேன் என்றார்.
தொடரும்,
சேதுராமன் ராமலிங்கம்,
ப.ஆ,
செயங்கொண்டம்.