Translate

புதன், அக்டோபர் 10, 2012

உலக பல்கலை விவாதம்: 2013ல் சென்னையில் நடக்கிறது


   சென்னை: 2013ம் ஆண்டுக்கான உலக பல்கலை விவாதம், சென்னையில் உள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, உலகம் முழுவதும் உள்ள 70 முன்னணி பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவ, மாணவிகள் தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 27ம் தேதி முதல் ஜனவரி 4ம் தேதி வரை உலக பல்கலைக்கழக விவாதம் நடைபெறும். இந்த ஆண்டு பெர்லின் நகரில் விவாதம் நடைபெறுகிறது. 1981ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்த விவாத நிகழ்ச்சி, கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்றது.
அதில், 2013 ஆண்டு உலக பல்கலைக்கழக விவாதம் நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் இந்தியாவில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் 2013ம் ஆண்டு இந்த விவாத நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என இதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நடராஜன் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் உள்ள பிரபல பல்கலைக்கழகங்களான, Oxford, Cambridge, Harvard, Yale, MIT, Stanford, Monash, Sydney போன்றவை இந்த விவாத நிகழ்ச்சிக்கு தங்களின் மாணவ, மாணவிகளை அனுப்பி வைப்பது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் உலக சாம்பியன்களாகவே கருதப்படுவர்.
போட்டி விதிகளின்படி, முதலில் வரும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவர். அதன் பின்னர் மாணவர்களை குழுக்களாக பிரித்து போட்டி நடத்தப்படும். ஒவ்வொரு குழுவுக்கும், போட்டி தொடங்குவதற்கு 15 நிமிடங்கள் முன்பாக, விவாதத்திற்கான தலைப்பு வழங்கப்படும். சுமார் 100 அறைகளில் மாணவர்கள் தனித்தனியாக விவாதம் நடத்துவார்கள்.
இதில் வழங்கப்படும் புள்ளிகளின் அடிப்படையில், படிப்படியாக அணிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, முடிவில் இறுதிச் சுற்றுக்கான விவாதம் நடத்தப்பட்டு, சாம்பியன் பட்டம் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான போட்டிகள் நடக்கும் பெர்லின் நகரில், 2013ம் ஆண்டு சென்னையில் நடத்தப்பட உள்ள போட்டிகள் பற்றி விளக்கமளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                                                                                          நன்றி--தினமலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக