Translate

செவ்வாய், அக்டோபர் 09, 2012

மதுரை மல்லிகைக்கு "புவிசார் குறியீடு': மலருக்கு கிடைத்த, "முதல் மரியாதை'


மதுரை: ""உலகளவில் தனித்துவம் வாய்ந்தது மதுரை மல்லிகை என்பதைக் குறிக்கும் வகையில், "புவிசார் குறியீடு' (ஜி.ஐ.,) கிடைத்துள்ளது,'' என, மதுரை விவசாயக் கல்லூரி டீன் வைரவன் தெரிவித்தார்.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய, "பழைய மதுரையின்' மண்வளம், மல்லிகைக்கு ஏற்றது. இந்த மண்ணில் விளையும் மல்லிகைக்கு மட்டும் கூடுதல் மணம், வெண்மை உண்டு. இரண்டு நாட்கள் வரை பூக்கள் வாடமல் நன்றாக இருக்கும். பூவின் காம்பும், இதழ்களும் சம உயரத்தில் இருக்கும். மதுரை மல்லி வாசம் என்றே சிறப்புடன் காலம் காலமாக போற்றப்படுவதே, மதுரை மல்லிகைக்கு சிறப்பு. தமிழகத்தின் பல இடங்களில், பரவலாக மல்லிகைப் பூக்கள் விளைந்தாலும், மதுரையின் சிறப்பு வேறிடத்தில் இல்லை. மதுரை மார்க்கெட்டிற்கு மட்டும் பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் 15 முதல் 20 டன் பூக்கள் வரத்து இருக்கும். நவம்பர், டிசம்பரில் வேறெங்கும் பூக்கள் உற்பத்தி இருக்காது; மதுரையில் மட்டும் குறைந்தளவு உற்பத்தி இருக்கும். இந்த சிறப்புகளுக்காக, மதுரை மல்லிகைக்கு "புவிசார் குறியீடு' கிடைத்துள்ளது. நாட்டில் ஒரு பூவிற்கு "புவிசார் குறியீடு' கிடைத்தது, இதுவே முதல்முறை.

இதுகுறித்து டீன் கூறியதாவது:

இரண்டு ஆண்டுகளாக, மதுரை விவசாயக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம் சார்பில், மல்லிகைக்கு "புவிசார் குறியீடு' பெறும் முயற்சியில் ஈடுபட்டோம். தனிநபர் பெயரில் வாங்க முடியாது என்பதால், தானம் அறக்கட்டளை மூலம், ஆறு மாவட்ட மல்லிகைப்பூ உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து, சங்கம் அமைத்தோம்; இதில் 200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்; தொழில்நுட்ப ரீதியான ஆவணங்களை, மார்ச் 2011ல், சென்னையில் உள்ள அலுவலகத்தில் சமர்ப்பித்தோம்; மீண்டும் சில ஆவணங்கள் தேவைப்பட்டதால், திருத்தப்பட்டு, மார்ச் 2012 ல், மீண்டும் விண்ணப்பித்தோம். இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது "அறிவுசார் சொத்துரிமை' (ஐ.பி.ஆர்.,) இதழில், "மதுரை மல்லிகை'க்கு "புவிசார் குறியீடு' வழங்கப்பட்டுள்ளதாக, வெளியிடப்பட்டுள்ளது. தொல்காப்பியம், பரிபாடல், திருவிளையாடற் புராணங்களில் "மதுரை மல்லிகை' பற்றி கூறப்பட்டுள்ள ஆவணங்களை, திரட்டியுள்ளோம். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது "பேக்கிங்' முக்கியம். அதற்கான தொழில்நுட்பத்தையும் விவசாயிகள், விற்பனையாளர்களுக்கு கற்றுத்தர உள்ளோம். நவம்பர், டிசம்பரில், உற்பத்தியை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன்:

இதனால் பூ வர்த்தகம் இன்னும் அதிகரிக்கும். "மதுரை மல்லிகை' என்று பெருமையாக சொன்னாலும், நான்கு ஆண்டுகளில் உற்பத்தி 30 சதவீதம் குறைந்துவிட்டது. விளைநிலங்கள் மனையாகி விட்டன; பத்தியை மீண்டும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தற்போது துபாய், கனடா, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, சென்னையிலிருந்து தான் ஏற்றுமதி செய்கிறோம். மதுரை விமான நிலையத்தில் பன்னாட்டு சேவை துவங்கினால், அதிகமாக ஏற்றுமதி செய்ய முடியும். அதற்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க ஏற்பாடு செய்யலாம்.

கலப்படம் செய்தால் "காப்பு'


* புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால், வெளிநாட்டு ஏற்றுமதிக்கு, குறிப்பிட்ட விலையை இனி நிர்ணயிக்க முடியும்.

* விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

* இப்பெயரில், மற்ற பகுதிகளில் விளையும் மல்லிகைப் பூக்களை கலப்படம் செய்ய முடியாது. அப்படி செய்தால், 2 லட்சம் ரூபாய் அபராதம், ஐந்தாண்டு சிறை தண்டனை உண்டு.

"புவிசார் குறியீடு' என்றல் என்ன:

ஒரு குறிப்பிட்ட இடத்தையோ (புவியியல்) அல்லது தோற்றத்தையோ, குறிப்பிடும் பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம், "புவிசார் குறியீடு' (ஜியாகிரபிக்கல் இண்டிகேஷன்) எனப்படுகிறது. இக்குறியீடு, அந்த பொருளின் சொந்த இடத்தின் தரத்தையும், நன்மதிப்பையும் பறை சாற்றும் சின்னமாக விளங்கும். இந்தியாவில் பாரம்பரியம் மிக்க பொருட்களுக்கு, மத்திய அரசு அங்கீகாரம் அளித்து பாதுகாக்கிறது. இச்சட்டம் 1999ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, செப்.15, 2003ம் ஆண்டு அமலுக்கு வந்தது.

இதன்படி மத்திய அரசால் பதிவு செய்யப்பட்ட தமிழக பொருட்கள்:


* சேலம் பேப்ரிக்
* காஞ்சிபுரம் பட்டு
* பவானி ஜமுக்காளம்
* மதுரை சுங்குடி
* கோவை வெட் கிரைண்டர்
* தஞ்சாவூர் வண்ண ஓவியங்கள்
* நாகர்கோவில் கோவில் நகைகள்
* தஞ்சாவூர் கலை தகடுகள்
* ஈஸ்ட் இந்தியா லெதர்
* சேலம் வெண்பட்டு
* கோவை கோரா பட்டு
* ஆரணி பட்டு
* சுவாமிமலை வெண்கலப் பொருட்கள்
* ஈத்தாமொழி நெட்டை தென்னை
* தஞ்சாவூர் பொம்மை
* விருப்பாச்சி மலை வாழை
* சிறுமலை மலை வாழை
* தற்போது மதுரை மல்லி
                                                                                             நன்றி--தினமலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக