Translate

புதன், அக்டோபர் 03, 2012

6 லட்சம் சொற்களுடன் விரிவுபடுத்தப்பட்ட தமிழ்ப் பேரகராதி


சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் விரிவு படுத்தப்பட்ட தமிழ் - தமிழ் - ஆங்கில அகராதி, 6 லட்சம் சொற்களுடன் தயார் செய்யப்பட்டுள்ளது. வட்டார வழக்குச் சொற்களுக்கு, இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மொழியின் வளத்தை, எடுத்துரைக்கும் அளவு கோலாக, அகராதி உள்ளது. தமிழ் மொழியின் முதல் அகராதி, 96 ஆண்டுகளுக்கு முன் வெளியானது. இணைப்புத் தொகுதிகளையும் சேர்த்து, ஏழு தொகுதிகள் இதுவரை வெளியாகியுள்ளன. கடந்த, 1924 முதல், 1939ம் ஆண்டு வரை, ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 996 சொற்களைக் கொண்ட தமிழ் அகராதியை, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இந்திய மொழிகளில், முதன் முதலில் அகராதியை வெளியிட்டது தமிழ் மொழி தான். இந்த அகராதியின் சிறப்புகளுக்காக, அகராதியின் தலைமைப் பதிப்பாசிரியர், வையாபுரி பிள்ளைக்கு, "ராவ் பகதூர்&' பட்டத்தை அரசு வழங்கியது. தமிழ் அகராதி வெளியாகி, 96 ஆண்டுகளில், அரசியல், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் பல துறைகளில், பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இவற்றின் தாக்கம், சமூக, பொருளாதார நிலைகளிலும் மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி, மொழியிலும் பதிவாகியுள்ளது. அகராதிகளும், இந்த தாக்கங்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த பின்னணியில், சென்னை பல்கலைக்கழகம், தமிழ்ப் பேரகராதியை திருத்தியும், புதுமைப்படுத்தியும் உருவாக்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இதற்கு, பல்கலைக்கழக மானியக் குழு, நிதியுதவி அளித்துள்ளது.
இதுகுறித்து, பேரகராதித் திட்டத் தலைவர் ஜெயதேவன் கூறியதாவது: புதுப்பிக்கப்படும் தமிழ் அகராதி, 12 தொகுதிகள் கொண்டதாக இருக்கும். ஆறு லட்சம் சொற்களுக்கு மேல் உள்ள, தமிழ் - தமிழ் - ஆங்கிலம் என, இரு மொழி அகராதியாகவும், வரலாற்று முறையில் பொருள் தருவதாகவும் அமைகிறது.
கிராமங்கள் நகரங்களாகி வருகின்றன. கிராம மக்கள் வாழ்க்கை முறையில், தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இச்சூழலில், வட்டார மொழிகள் மறைந்து வருகின்றன. வட்டார மொழிகளைக் காக்க, அவற்றை அகராதியில் பதிவு செய்ய வேண்டிய கடமை, இன்றியமையாததாக உள்ளது. வட்டாரச் சொற்களின் தொகுப்புகளை வைத்திருக்கும் தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் அவற்றை அனுப்பி வைக்கலாம். அவை, அகராதியில் சேர்க்கப்படும்.
அகராதி திருத்தும் பணி, 2003ம் ஆண்டு, மே, 1ம் தேதி துவங்கியது. அகராதியின் மாதிரி பதிவு, தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அகராதியியல் வல்லுனர்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டன. அதனடிப்படையில், அகராதி திருத்தும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
ஆதார நூல்கள்: தொல்காப்பிய அகராதி, சட்டச் சொல் அகராதி, அணிகலன்கள் அகராதி, சித்திரகவிக் களஞ்சியம், உரிச்சொல் நிகண்டு அகராதியும் மூலமும், ஆசிரிய நிகண்டு அகராதியும் மூலமும், பிங்கல நிகண்டு அகராதியும், மூலமும், பாட்டியல் களஞ்சியம் ஆகிய ஆதார நூல்கள் பேரகராதிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.
அகராதியின், முன்வடிவ நிலை, 10 தொகுதிகள், 5,385 பக்கங்கள் உள்ளதாக தொகுக்கப்பட்டுள்ளன. 11வது தொகுதி பணி, முடியும் நிலையில் உள்ளது. பேரகராதி திட்டத்துக்கு, "ஆற்றல்சால் பல்கலைக்கழகம்&' திட்டத்தின் கீழ், பல்கலைக்கழக மானியக் குழு, 40 லட்சம் ரூபாயும், தமிழக அரசு, 10 லட்சம் ரூபாயும், முனைவர் ஆ.கந்தையா, 25 ஆயிரம் ரூபாயும் நிதியளித்தனர்.
இப்பணிக்கான, கூடுதல் நிதியை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் வழங்கியதோடு, பணியாளர்களையும் கூடுதலாக நியமித்தார். இவ்வாறு ஜெயதேவன் கூறினார்.
                                                                                                                                                     நன்றி--தினமலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக