Translate

வெள்ளி, அக்டோபர் 26, 2012

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் டெங்கு காய்ச்சல் பரவியது: பொதுசுகாதாரத்துறை தகவல்

............
சென்னை, அக்.26-பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நீரினால் பரவும் நோய்கள் மற்றும் நோய்களை கண்டறியவும் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் சென்னையில் உள்ள மருத்துவத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் புதிதாக ரூ.2.75 கோடி மதிப்பில் பிரமாண்டமான கட்டிடம் கட்ட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

பொது சுகாதாரத்துறையின் தலைமை அலுவலகத்திற்காக கட்டப்படும், இந்த கட்டிடம் நவீன வசதிகளுடன், பகல் பொழுதில் மின்சார சிக்கனத்திற்காக அலுவலகத்திற்குள் சூரியஒளி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதி திட்டத்தின் கீழ் ஆறு மாடி கட்டிடம் கட்ட பொது சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது.

இதுவரை பொது சுகாதாரத்துறைக்கு என்று தனியாக கட்டிடம் இல்லாத நிலை இருந்துவந்தது. பொது சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு பிரிவுகள் தற்போது மருத்துவத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது.

புதிய கட்டிடம் கட்டிமுடித்த உடன், அனைத்து அலுவலகங்களும் ஒருங்கிணைத்து புதிய கட்டிடத்தில் செயல்படும் வகையில் மாற்றப்பட உள்ளது. வரும் நிதியாண்டில் முதல் தளம் கட்டும் பணி தொடங்க உள்ளது.   பொது சுகாதாரத்துறையில் மட்டும் 40 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களது செயல்பாடுகளை ஆராயவும், ஆய்வு செய்யவும் மாநில தலைமை இயக்குனர் அலுவலகத்தில் மாதம் தோறும் ஆய்வு கூட்டம் நடந்து வருகிறது. அந்தவகையில் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை-இயக்குனர்களுக்கான ஆய்வு கூட்டம் நடக்கிறது.

பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடக்கிறது. டெங்கு காய்ச்சலை முற்றிலுமாக கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து நேரடி ஆய்வு செய்யப்படுகிறது. கள அதிகாரிகள் பங்கேற்பதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தொடர்ந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் டெங்கு காய்ச்சலை முற்றிலுமாக அழிக்க பல்வேறு ஆய்வுகளும் நடத்தப்பட்டது. முதல் கட்ட ஆய்வில் டெங்கு காய்ச்சலுக்கு பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

எப்போதும் இல்லாத அளவு பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்திவிட்டு, குப்பைகளில் போடுகின்றனர். இதனால் பிளாஸ்டிக்குகளில் மழை தண்ணீர் தேங்குவதால் அதில் கொசு முட்டையிட்டு பெருகுகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவுவதாக தெரியவந்துள்ளது.

இதனால் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நோய் கண்டவர்களுக்கு போதிய மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக