Translate

செவ்வாய், அக்டோபர் 02, 2012

மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தலைமையில் உயிரி பன்முகத்தன்மை குறித்த சர்வதேச மாநாடு



அய்தராபாத், அக்.2- மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தலைமையில், உயிரி பன்முகத்தன்மை குறித்த சர்வதேச மாநாடு அய்தராபாத் நகரில் நேற்று தொடங்கியது.

வாழ்ந்து கொண்டிருக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்ற உயிரினங்களின் உயிரி பன்முகத்தன்மை குறித்த பன்னாட்டு மாநாட்டை 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் நடத்தியது. அடுத்த 2 ஆண்டுகளுக்கு அந்த மாநாட்டை நடத்தும் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டு உள்ளது. அதன்படி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தலைமையில் இந்த மாநாடு நடைபெற இருக்கிறது.

ஒவ்வொரு நாட்டிலும் 2 ஆண்டுகள் பன்னாட்டளவில் இந்த மாநாடு நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக ஜப்பானில் இந்த மாநாடு நடந்தது. `அய்ச்சி' என்ற தலைப்பில், 20 அம்ச திட்டத்தை உருவாக்கி, அதை நிறைவேற்றும் வகையில், என்னென்ன திட்டங்களை மேற்கொள்ளலாம் என்பது குறித்து இந்த மாநாடு ஆராயும்.

அதன்படி, வாழ்ந்து கொண்டிருக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்ற உயிரினங்களின் உயிரி பன்முகத்தன்மை குறித்த 5 நாள் பன்னாட்டு மாநாடு அய்தராபாத் நகரில் உள்ள பன்னாட்டு மாநாட்டு மய்யத்தில் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தலைமையில் நேற்று தொடங்கியது. மரபுசார் உயிரி பாதுகாப்பு தொடர்பான இந்த மாநாட்டில் 190 நாடுகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உள்ளனர்.

மாநாட்டுக்கு தலைமை தாங்கிய மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பேசுகையில்,

தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்ற உயிரினங்களின் உயிரி பன்முகத்தன்மையில் மேற்கொள்ளப்படும் மாற்றத்தினால் பல்லுயிர் பெருக்கம், மனிதர்களின் சுகாதாரம், சமூக-பொருளாதார மாற்றங்கள் ஆகியவற்றில் ஏற்படும் நீண்டகால விளைவுகள் குறித்து சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அவர்களுக்கு உள்ள அச்ச உணர்வை போக்கி, இந்த பிரச்சினையில் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நவீன தொழில்நுட்பத்துக்கும் உயிரி பாதுகாப்பு மீதான விளைவுகளுக்கும் இடையே சமன்பாட்டை உருவாக்குவது எளிதானது அல்ல என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார். நயோகா துணை உடன்படிக்கையில் இந்தியா கடந்த ஆண்டு கையெழுத்திட்டதாக கூறிய அவர், அதற்கு மற்ற நாடுகளும் விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கூறியதோடு அதில் உள்ள அம்சங்களை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டார்.

இந்தியாவில் உயிரி தொழில்நுட்ப துறை வலுவாகவும் உறுதியாகவும் உள்ளதாகவும், பல்லுயிர் பாதுகாப்பு தொடர்பான கார்டஜெனா உடன்படிக்கையை சமநிலை தன்மையுடன் நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தனது உரையின் போது தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக