அவர் வானில் அவ்வளவு உயரத்திலிருந்து கீழே குதித்தது சாதனை தான். ஆனால் அதை விட அந்த அளவு உயரத்துக்கு அவர் போய்ச் சேர்ந்தார் என்பதே பெரிய சாதனை விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட விண்வெளி உடையை அவர் அணிந்திருந்தார் என்பதால் பிழைத்தார்.
![]() |
உயரே கிளம்ப பலூன் ஆயத்தமாகிறது |
1862 ஆம் ஆண்டில் பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் கிளைஷர், ஹென்றி காக்ஸ்வெல் ஆகிய இருவரும் ஒரு பெரிய பலூனின் அடிப்புறத்தில் இணைக்கப்பட்ட வாய் திறந்த பெரிய பிரம்புக் கூடைக்குள் அமர்ந்தபடி உயரே கிளம்பினர்.அப்போதெல்லாம் உயரே செல்வதற்கு இந்த முறையே பின்பற்றப்பட்டது. 11 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியதும் இருவரும் கடும் குளிரால் நடுங்கினர். அந்த உயரத்தில் குளிர் மைனஸ் 11 டிகிரி.
அந்த இருவருக்கும் கைகால்கள் உணர்விழந்தன. கண் இருண்டது. நினைவு தடுமாற ஆரம்பித்தது. கிளைஷர் நினைவிழந்து விட்டார். உயிருக்கு ஆபத்து ஏற்படப் போவதாக உணர்ந்த காக்ஸ்வெல் கைகளைப் பயன்படுத்த முடியாத நிலையில் பற்களால் ஒரு கயிற்றைப் பிடித்து இழுத்தார்.
![]() |
39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து குதிக்க ரெடி |
வானில் உயரே செல்லச் செல்ல காற்று அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். என்னதான் சுவாசித்தாலும் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காது.
ஒரு ஸ்பூன் மருந்தை அரைத் தம்ளர் தண்ணீருடன் சேர்த்து அருந்தினால் மருந்து உடலில் சேரும். அப்படியின்றி ஒரு ஸ்பூன் மருந்தை அண்டா தண்ணீரில் சேர்த்து அதிலிருந்து அரைத் தம்ளர் தண்ணீரை எடுத்து அருந்தினால் உடலில் மருந்து சேர வாய்ப்பே இல்லை.
அது மாதிரியில் அடர்த்தி குறைந்த காற்றை என்னதான் முழுக்க உள்ளே இழுத்து சுவாசித்தாலும் உடலுக்குக் கிடைக்கின்ற ஆக்சிஜன் மிக அற்ப அளவில் தான் இருக்கும். இதல்லாமல உயரே செல்லச் செல்ல பல ஆபத்துகள் உண்டு.
![]() |
பலூனிலிருந்து கீழே குதிக்கிறார் |
தவிர, ஏதோ அவசர நிலைமை ஏற்பட்டால் பயணிகள் சுவாசிப்பதற்கென விமானத்தில் ஒவ்வொரு இருக்கைக்கும் மேலே ஆக்சிஜன் அளிக்கும் கருவி உள்ளது. இந்த விமானங்கள் ஒரு வகையில் காற்று அடைத்த ’பலூன்களே ’ ’விமானத்தின் வெளிப்புற சுவர்களில் ஓட்டை விழுந்தால் விமானத்தில் உள்ள அனைவரும் வெளியே தூக்கி எறியப்படுவர்.
சுவாசிக்க தகுந்த காற்றழுத்தம் இல்லாத நிலையில் சுமார் 9100 மீட்டர் உயரத்தில் ஒருவர் ஒரு நிமிஷ நேரம் இருந்தால் நினைவு போய் விடும். 15 ஆயிரம் மீட்டர் உயரத்தில 15 வினாடியில் நினைவு இழப்பார்.
![]() |
கீழ் நோக்கிப் பயணம் |
ஆகவே தான் பெலிக்ஸ் பாம்கார்ட்னர் ஒன்றன் மேல் ஒன்றாக நான்கு அடுக்குகளாக அமைந்த விண்வெளிக் காப்பு உடையை (Space suit) அணிந்திருந்தவராக உயரே சென்றார்.
அடுக்கடுக்கான இந்த ஆடைகள் அவருக்குத் தகுந்த காற்றழுத்தத்தை அளித்தன. வெளியே நிலவிய குளிர் தாக்காமல் தடுத்தன. சூரியனிலிருந்து வெளிப்படும் ஆபத்தான கதிர்வீச்சு தாக்காமல் பாதுகாப்பு அளித்தன. இவ்விதமாக இந்த உடை அவரைப் பல வகைகளிலும் பாதுகாத்தது.
அவர் பலூன் மூலம் உயரே செல்லும் போதும் பின்னர் கீழே குதிக்கும் போதும் அவரது உடலில் ஏற்படுகின்ற மாற்றங்களை உடனுக்கு உடன் தெரிவிக்க அவரது உடலில் பல உணர் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. அவரது உடையில் கம்ப்யூட்டர் சில்லுகள் பொருத்தப்பட்டிருந்தன.காமிராவும் பொருத்தப்பட்டிருந்தது.
![]() |
பாராசூட் தரையைத் தொடுவதற்கு முன் |
பெலிக்ஸ் பாம்கார்ட்னர் பலூனில் உயரே கிளம்பு முன்னர் விசேஷ உணவை அருந்த வேண்டியிருந்தது. வயிறு, குடல் என உடலில் எங்கும் வாயுவே இருக்கக்கூடாது என்பதற்காக விசேஷ உணவு. உயரே கிளம்பும் நேரம் வரை சுமார் 2 மணி நேரம் அவர் சுத்த ஆக்சிஜனை சுவாசிக்கும்படி செய்யப்பட்டார்.
ரத்தத்தில் சிறிது கூட நைடரஜன் வாயு இருக்கக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. ( நாம் சாதாரணமாக சுவாசிக்கும் காற்றில் நைட்ரஜன் 78 சதவிகிதம் உள்ளது. ஆக்சிஜன் 21 சதவிகிதம் உள்ள்து)
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் அக்டோபர் 14 ஆம் தேதி உள்ளூர் நேரம் காலை 9-30 மணிக்கு பெலிக்ஸ் பாம்கார்ட்னரை சுமந்தபடி ஹீலியம் வாயு நிரப்பப்ப்டட பலூன் உயரே கிளம்பியது. ஹீலியம் வாயு காற்றை விட லேசானது என்பதால் அது மேலே செல்லத் தொடங்கியது.
பலூன் 1,28,000 அடி உயரத்தை ( 39 கிலோ மீட்டர் ) எட்டுவதற்கு இரண்டு மணி நேரம் பிடித்தது. அந்த உய்ரத்தை எட்டியதும் பெலிக்ஸ் தனது கூட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து கீழ் நோக்கிக் குதித்தார்.
![]() |
அப்பாடி, வந்தாச்சு |
சில வினாடிகள் கரணம் அடித்தபடி விழுந்து கொண்டிருந்த பெலிக்ஸ் நல்ல வேளையாக சுதாரித்துக் கொண்டார். முறைப்படி அதாவது தலை கீழ் நோக்கி இருக்க, கைகள் உடலோடு ஒட்டியிருக்க -- ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் குளத்தில் குதிக்கின்ற நீச்சல் வீரர்களின் பாணியில்--- கீழ் நோக்கி இறங்கலானார். அவர் நான்கு நிமிஷம் 20 வினாடி நேரம் வான் வழியே தொடர்ந்து விழுந்து கொண்டே இருந்தார்.
ஒரு கட்டத்தில் அவர் கீழ் நோக்கி மணிக்கு 1340 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தார். இது ஒலி வேகத்தைக் காட்டிலும் அதிகம். இவ்வளவு வேகத்தை மனித உடல் தாங்குமா என்ற கேள்வி இருந்தது. நல்லவேளையாக பெலிக்ஸுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. வானில் இந்த அளவு வேகத்தில் ’ப்யணம்’ செய்த முதல் நபர் அவர் தான்.
தரையிலிருந்து சில ஆயிரம் அடி உயரத்தில் பாராசூட் திட்டமிட்டபடி விரிந்தது. பின்னர் அவர் பொத்தென்று தரையில் வந்து குதித்தார்.உயரே இருந்து கீழே வந்து சேர 10 நிமிஷங்களே ஆகின.
உலகில் வானில் மிக உயரத்திலிருந்து குதித்த சாதனை, அதி வேகமாகப் பாய்ந்த சாதனை. பலூன் மூலம் மிக உயரத்துக்குச் சென்ற சாதனை என அவர் மூன்று சாதனைகளைப் படைத்தவரானார்.
பெலிக்ஸ் 16 வயதிலேயே பாராசூட்டிலிருந்து குதிப்பதில் பயிற்சி பெற ஆரம்பித்தவர். மிக உயர்ந்த கட்டடங்கள் மிக உயர்ந்த பாலங்கள் ஆகியவற்றிலிருந்து குதித்து சாதனை படைத்தவர். அவருக்கு அதே வேலை.
.எனினும் மிக உயரத்திலிருந்து குதிக்க விசேஷ விண்வெளிக் காப்பு உடை அணிய வேண்டும் என்ற நிலைமை வந்த போது அதை அணிவதற்கு பெலிக்ஸ் தயங்கினார். சிறு இடத்துக்குள் அடைபட்டுக் கிடப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு அவரிடம் பயம் தோன்றியது. இதை Claustrophobia என்று கூறுவர். மனோதத்துவ நிபுணர்களிடம் சிகிச்சை பெற்ற பிறகே அவருக்கு இந்த பயம் நீங்கியது.
அதன் பிறகு தான் அவர் வானில் 21 கிலோ மீட்டர், 29 கிலோ மீட்டர் என மிக உய்ரத்திலிருந்து குதிப்பதில் அனுபவம் பெற்றார். அதன் முத்தாய்ப்பாகவே இப்போது 39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து குதித்துள்ளார்.
ஒருவர் ஒரு சாதனை படைத்தால் அதை மிஞ்ச மற்றவர்கள் முனைவது உண்டு. ஆனால் பெலிக்ஸின் சாதனையை மற்றவர் பின்பற்றுவது எளிதல்ல. ஹீலியம் நிரப்பப்பட்ட பலூனுக்கு ஆன செலவே இரண்டரை லட்சம் டாலர்.அவர் அணிந்திருந்த விசேஷ உடைக்கு ஆன செல்வும் மிக அதிகம். மொத்தத்தில் பல கோடி டாலர் செலவாகியிருக்கும். செலவு கணக்கு விவரம் தெரிவிக்கப்படவில்லை.
![]() |
சாதித்து விட்டேன், வெற்றி, வெற்றி |
இது பெலிக்ஸின் தனிப்பட்ட முயற்சி அல்ல.இது உலகின் பல நாடுகளிலும் Red Bull எனப்படும் எனர்ஜி பானத்தை விற்கும் பிரும்மாண்டமான ஆஸ்திரிய நிறுவனம் தனது பானத்துக்கு விளம்பரம் செய்வதற்காகக் கையாண்ட ஏற்பாடே.
ஆனாலும் நாஸா விஞ்ஞானிகள் இதில் அக்கறை காட்டினர். உடலியல் தொடர்பான ஆராய்ச்சி நிபுணர்கள் பெலிக்ஸ் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களில் தீவிர அக்கறை கொண்டுள்ளனர்.
பெலிக்ஸின் அனுப்வம் எதிர்காலத்தில் தகுந்த விண்வெளி உடையை உருவாக்கவும் அவசர நிலைமைகளில் விண்வெளி வீரர்களின் உயிரைக் காப்பாற்றுவற்கும் மேலும் சிறப்பான பலூன்களை உருவாக்கவும் உதவும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் இது முற்றிலும் விளம்பர ஸ்டண்ட அல்ல.
காற்று மண்டல நிலைமைகளும் பெலிக்ஸ் போன்றோரின் அனுபவ்மும் காட்டுவது இது தான். அடிப்படையில் மனிதன் ஒரு நில வாழ் உயிரினம்.
நன்றி-என்.ராமதுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக