எனக்கு இப்போதும் ஞாபகமிருக்கிறது. என்னுடைய முதலாமாண்டு ஆசிரியையாக கொழுந்து ரீச்சர் இருந்தார். அவர் தன்னுடைய வாழ்க்கையில் 50 வருடங்களுக்கும் அதிகமான காலம் ஆசிரியையாகவே இருந்தார். அதுவும், அதிக மாற்றங்களின்றி தன்னுடைய பிரதேசத்திலேயே பணியாற்றினார். என்னுடைய தந்தையின் முதலாவது ஆசிரியையும் அவரே.
என் கைகள் பற்றி விசாரிக்க ஆரம்பித்த அவர், நான் செய்த குழப்படிகள்- பள்ளிக்கு மட்டம் போட நான் கையாண்ட தகிடுதத்தங்கள் வரை மறக்காமல் இருக்கிறார். அத்துடன், நான் முதலாமாண்டில் முதல் இரு மாணவர்களின் ஒருவராக வந்தது வரை மறக்கவேயில்லை. அதுமட்டுமில்லை, என்னுடைய தந்தையின் குறும்புத்தனங்கள்- கல்வியின் மீதான ஆர்வம் வரை அவர் விவரித்துச் சென்றதைப் பார்த்த போது ஒவ்வொரு மாணவனும்- மாணவியும் ஆசிரியர்களுக்கு எவ்வளவு வயதானாலும் குழந்தைகளாகவும்- மாணவர்களாகவுமே இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.
ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தைகளை எவ்வளவு அக்கறையுடன் கவனித்து வளர்த்தெடுக்கிறார்களோ, அதேயளவு அக்கறையை பல ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களின் மீது காட்டுகிறார்கள். ‘எங்கள் நாட்டு கல்வி முறைமை- கற்பிக்கும் விதங்களின்’ மீது நாங்கள் எவ்வளவு விமர்சனங்களை வைத்தாலும் ஆசிரியர்கள் மீது குற்றங்களை முன்வைப்பது அவ்வளவுக்கு சாத்தியமில்லாமல் போகிறது.
ஏனெனில், அவர்கள் கற்பிக்கும் ஆசிரியர்கள் என்கிற வரையறைக்கும் மட்டும் இருந்து விடுவதில்லை. தேவைப்படும் போது மிக நல்ல நண்பனாகவும் தோளோடு தோள் சேர்க்கிறார்கள். பெற்றோரிடம் பேச பயப்படுகின்ற பல விடயங்களையும் எங்களுக்கு நெருக்கமான ஆசிரியர்களிடம் பேசி முடிவைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. ஒவ்வொரு ஆசிரியரும் பெற்றோராகவும்- குருவாகவும்- நண்பனாகவும் மூன்று பாத்திரங்களை ஏற்று பயணப்படுகின்றனர். அவர்களின் ஆசிரிய வாழ்க்கையின் ஆரம்பம் முதல் இறுதிவரை அப்படியே இருக்கிறார்கள்.
ஆசிரியர்கள் மீதான கோபமும்- வருத்தமும் மாணவர்களுக்கு, அவர்களின் பதின்ம வயதில் அதிகளவில் வெளிப்படுகிறது. அதன் விளைவாக ‘பட்டப்பெயர்கள்’ வரை வளர்த்து விடுகின்றனர். ஆனால், மாணவர்கள் என்ன செய்தாலும் ஆசிரியர்கள் அதிகளவில் மாறுவதில்லை. மாணவன் திரும்பவும் தன்னுடைய பதின்ம வயதுகளைக் கடக்கிற போது, முதலாமாண்டு மாணவனாகவே ஆசிரியரைக் காணும்போது வந்து சேர்கிறான். அப்போது, அந்த மாணவனின் உண்மையான மரியாதையும்- ஆசிரியர்கள் மீதான பாசமும் வெளிப்படுகிறது. இதனை, பலரும் உணர்ந்திருப்போம்.
என்னுடைய மாணவப்பருவத்தை பல பள்ளிகள்- பல ஆசிரியர்கள் என்று கடந்து வந்திருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய ‘ரோல்மொடல்’களாகவும் பல ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், ஆசிரியர்கள் இறுதிவரை ஆசிரியர்களாகவே இருக்கிறார்கள். நாங்கள் அவர்களைக் கடந்து அதிக தூரம் வந்துவிடுகிறோம்.
என் கைபிடித்து ‘அ’ எழுத கற்பித்த தேவமலர் ரீச்சரிலிருந்து, என்னுடைய ஊடக கல்விக்காலத்தில் மிகச்சிறந்த நண்பனாகவும்- வழிகாட்டியாகவும் இருந்த ஜெகா வரை ஆசிரியர்களினால் ஆசிர்வதிக்கப்பட்ட மாணவனாகவே வலம் வந்திருக்கிறேன். ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு மாதிரி- அவர்களின் அணுகுமுறையில் இருந்து- கற்பிக்கும் முறைமை வரை வித்தியாசங்கள் நிறைய உண்டு. ஆனால், என் கரம் பிடித்து உலகத்தை காட்டிய தேவன்களாகவும், தேவதைகளாகவும் இருக்கிறார்கள்!
என்னுடைய ஆசிரியர்களில் பலர் இன்னமும் புதிய மாணவர்களுடன் அதே குதூகலத்துடன்- அக்கறையுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் எந்தவித மாற்றமும் இல்லை. அதே ஆர்வத்துடன் மாணவர்களை அரவணைத்து கற்பிக்கிறார்கள். ஆனால், மாணவர்கள் சில காலத்துக்குள்ளேயே மாறிவிடுகிறார்கள். எல்லாவற்றையும் கடந்து சென்று விடுகிறார்கள். இறுதிவரை ஆசிரியர்கள் மாறுவதில்லை. மாணவர்கள் மாறிவிடுகிறார்கள்!!
COURTESY---மருதமூரான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக