Translate

திங்கள், அக்டோபர் 22, 2012

வெயிலை அதிகம் ஈர்க்க கருப்பு சோலார் பலகைகள்



சோலார் பலகைகள் எனப்படும் சூரிய மின் பலகைகள் ஆழ்ந்த நீல நிறத்தில் காணப் படுகின்றன.  உலகெங்கிலும் சூரிய மின் பலகைகள் இந்த நிறத்தில் தான் காணப் படுகின்றன. கூடிய விரைவில் இவை நல்ல கருப்பு நிறத்தில் தயாரிக்கப்படலாம். அதற்குக் காரணம் உண்டு

இப்பலகைகள் மீது சூரிய ஒளி படும் போது ஒளியானது மின்சாரமாக மாற்றப் படுகிறது. சூரிய ஒளி என்பது போட்டான்களே. இந்த போட்டான்களைத் தான் சூரிய மின் பலகைகள் கிரகிக்கின்றன. போட்டான்கள் அதிக அளவில் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இதுவரை ஆழ்ந்த  நீல நிறத்தை பயன்படுத்தி வந்தார்கள்.

அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் உள்ள நாட்கோர் டெக்னாலஜி என்ற நிறுவனம் அட்டைக் கரி என்று சொல்வோமே அந்த அளவுக்கு கருப்பாக உள்ள சோலார் செல்களைக் கொண்டு சூரிய மின் பலகையைத் தயாரித்து சோதித்துப் பார்த்தது. வழக்கமான சூரிய மின் பலகைகள் சூரிய ஒளியில் அடங்கிய போட்டான்களில் 96 சதவிகிதத்தையே கிரகிப்பதாகக் கூறப்படுகிறது.

இத்துடன் ஒப்பிட்டால் கருப்பு நிற சோலார் செல்கள் 99.7 சதவிகித அளவுக்கு போட்டான்களைக் கிரகிப்பதாகத் தெரிய வந்துள்ளது. இந்த வித்தியாசம் வெறும் மூன்று சதவிகிதமே என்றாலும் கருப்பு சோலார் செல்களைப் பயனபடுத்தும் போது கூடுதல் மின்சாரம் கிடைக்கும் என்பது சுட்டிக் காட்டப்படுகிறது.

கருப்பு நிற சோலார் மின் பலகைகள் குறித்து இத்தாலி, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக