நாராயண் தேசாய் மகாத்மா காந்தியின் செயலாளராக இருந்த மகாதேவ தேசாயின் மகன். காந்தியின் சபர்மதி மற்றும் வார்தா ஆசிரமங்களில் வளர்ந்தவர். அகமதாபாத்தில் காந்தி துவக்கிய குஜராத் வித்யா பீடம் என்கிற பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பொறுப்பு வகிக்கும் நாராயண் தேசாய்நாடெங்கும் சென்று மகாத்மா காந்தியின் வாழ்க்கையைப் பற்றி, ‘காந்தி கதா‘ என்னும் நிகழ்ச்சியை வழங்குகிறார்.
என் பத்துப் பதினோரு வயசில்,சபர்மதி ஆசிரமத்தில் இருந்தபோது, சபர்மதி ஆற்றில் மகாத்மாவோடு குளித்து விளையாடிய நாட்கள் எனக்கு பசுமையாக நினைவிருக்கின்றன" என்று கூறும் 88 வயது தேசாய், அண்மையில் சென்னை வந்திருந்தார். கலாஷேத்ரா அரங்கில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காந்தியைப் பற்றிய பல விஷயங்களை மிக நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார். அவர் தெரிவித்த சில முக்கிய விஷயங்களின் தொகுப்பு:
மகாத்மா காந்தி ஆகாகான்மாளிகையில் சிறை வைக்கப் பட்டிருந்தபோது, அங்கே அவரோடு சிறையில் இருந்த கவிக்குயில் சரோஜினி நாயுடு, காந்திஜியிடம் கிண்டலான தொனியில், ‘பாபு, நீங்கள் நூற்றுக்கணக்கான பெண்களை உங்கள் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறீர்கள்‘ என்று சொல்ல, உடனே மகாத்மா, ‘நூற்றுக்கணக்கில் என்பது தவறு; ஆயிரக்கணக்கில் என்பதே சரி!‘ என்று இடைமறித்தார். சரோஜினி நாயுடு தொடர்ந்தார்: ‘சரி! அந்த ஆயிரக்கணக்கான பெண்களில் யார் ரொம்ப அழகு?’ என்று கேட்டார். மகாத்மா துளியும் யோசிக்காமல் சட்டென்று, ‘சந்தேகமென்ன? கஸ்தூர்பாதான்!’ என்று பதில் சொன்னார். இந்தப் பதிலைக் கேட்ட நாயுடு,சிறையின் வேறு ஒரு பகுதியில் இருந்த கஸ்தூர்பாவிடம் சென்று ‘ மா! பாபுவிடம், அவர் சந்தித்த பெண்களிலேயே ரொம்ப அழகானவர் யார்? என்று கேட்டேன்; அவர், கஸ்தூர்பாதான் என்று சொல்கிறாரே!‘என்று சொல்ல, மிகவும் வெகுளித்தனமாக கஸ்தூர்பா சொன்ன பதில், ‘என் கணவர் எப்போதும் பொய் சொல்லவே மாட்டார்!’
மகாகவி தாகூரின் சாந்திநிகேதனுக்கு காந்திஜி விஜயம் செய்தபோது தாகூரே, சாந்திநிகேதன் வளாகத்தில் காந்திஜி தங்குவதற்காக ஓர் அறையை ஏற்பாடு செய்து, அதன் உள், வெளி அலங்காரப் பணிகளை, தானே மேற்பார்வையிட்டார். ஆனால், சாந்திநிகேதனுக்கு வந்து இறங்கிய காந்திஜியை அந்த அறைக்கு அழைத்துச் சென்றபோது, ‘இரவில் நான் இந்த அறைக்குப் பதிலாக, மொட்டை மாடியில் இரவு நேர நட்சத்திரங்களை ரசித்தபடிதூங்குகிறேனே!’ என்று சொல்லி விட்டார்.
மகாத்மா காந்திக்கு தாய்மொழிப்பற்று அதிகம். அவர் தென்னாப்ரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியபோது, மும்பையில் வாழ்ந்த குஜராத்தி சமூகத்தினர் அவருக்கு முகமது அலி ஜின்னா தலைமையில் ஒரு வரவேற்பு அளித்தார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பெரும்பாலான காங்கிரஸ் பிரமுகர்கள் ஆங்கிலத்திலேயே பேசினார்கள். காந்திஜி, ‘உங்களில் ஒருவர் கூட உங்கள் தாய்மொழியான குஜராத்தியில் பேசாதது எனக்கு வியப்பளிக்கிறது’ என்று சொல்லி, குஜராத்தி மொழியில் உரையாற்றினார். அதேபோல, காந்திஜி குஜராத்தி மொழியில் எழுதுவதற்கே முன்னுரிமை அளித்தார்.
காந்திஜி தன் வாழ்நாளில் 30 தடவைகள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் உண்ணாவிரதம் ஆரம்பித்த சில நாட்களில் அவரது உடம்பு பலவீனமடைந்தாலும்கூட, அவரது ஆன்ம பலம் வலுவானதாக இருக்கும். ஒவ்வொரு முறையும் உண்ணாவிரதம் ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்னாலிருந்தே சிறிது படபடப்பாக இருப்பார். நவகாளியில் மதக் கலவரம் நடந்தபோது ஒருவர், ‘மகாத்மா உண்ணாவிரதம் இருக்க வேண்டும்’ என்று கருத்துத் தெரிவித்தார். அதற்கு, ‘நான் எப்போது உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று மற்றவர்கள் எனக்கு ஆலோசனை சொல்லவேண்டிய அவசியமில்லை; அதை என் உள்ளுணர்வு எனக்குச் சொல்லும்’ என்று பதிலளித்தார். தொடர்ந்து, ‘காந்திஜி நவகாளிக்கு வந்தால், அவர் வரும் வழியில் கற்களையும் முட்களையும் போட்டு வைப்போம்’ என்று கலவரக்காரர்கள் அச்சுறுத்தியபோது காந்திஜி, ‘நீங்கள் எந்தெந்தப் பாதைகளில் கற்களையும் முட்களையும் போட்டு வைப்பீர்கள் என்று சொன்னால், நான் அந்த வழியில் காலில் செருப்பணியாமல் நடந்து வருவேன்’ என்றார்.
இரண்டாம் உலகப்போரின்போது, அதில் இந்திய ராணுவத்தை ஈடுபடுத்துவது குறித்து காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்தபோது வைசிராய் அப்போது இந்தியாவின் கோடைத் தலைநகரமான சிம்லாவில் தங்கி இருந்தார். அவர் காந்திஜியை சிம்லாவுக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையின்போது, காந்திஜி கேட்ட சில கேள்விகளுக்கு, வைசிராயால் உடனடியாகப் பதிலளிக்க முடியாத நிலையில் அவர் காந்திஜியிடம், ‘இப்போதைக்கு பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வோம். உங்கள் கேள்விகளுக்கான பிரிட்டிஷ் அரசின் நிலைப்பாடு குறித்து லண்டனுக்கு கடிதம் எழுதுகிறேன். விளக்கம் கிடைக்கப் பெற்றதும் பேச்சுவார்த்தையை தொடருவோம்’ என்று ஒரு வார கால அவகாசம் கேட்டுப் பெற்றார். காந்திஜியின் உடனிருந்த என்னைப் போன்ற சிலர், ஆஹா! ஜாலியாக ஒரு வாரம் சிம்லாவில் கழிக்கலாம் என மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் காந்திஜியோ, அன்றே ஆசிரமத்துக்குப் புறப்பட வேண்டும் என்று சொன்னார். நாங்கள், ‘ஒரு வாரத்தில், ஊருக்குப் போய் வருவதில் நான்கு நாட்கள் பயணத்திலேயே கழிந்துவிடும். மூன்று நாட்கள் தங்குவதற்காக ஊருக்குப் போய்த்தான் ஆகவேண்டுமா?’ என்று கேட்டபோது, ‘பர்கிடேவுக்கு மூன்று நாட்களாவது மசாஜ் செய்து விடலாமில்லையா?’ என்று கேட்டார். பர்கிடே, ஆசிரமத்தில் வசித்த ஒரு தொழுநோயாளி. குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்ட அவருக்கு ஆசிரமத்தில் இடமளித்து தினமும் அவரது கால்களுக்கு மசாஜ் செய்துவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் காந்தி."
அக்டோபர் 2: காந்தி பிறந்தநாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக