அழிந்து வரும் பூச்சியினமும் நசிந்து வரும் விவசாயமும்
கண்மூடித்தனமாக பூச்சிகொல்லி மருந்து பயன்படுத்துவதால் நன்மை பயக்கும் பூச்சிகளும் அழிந்து வருகின்றன. அதன் தொடர் விளைவாக விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயம் பெரும் சிக்கலை சந்திக்கிறது என சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கை கூறுகிறது. கொல்கத்தா பல்கலைக் கழகத்தை சார்ந்த உயிரியல் ஆய்வாளர் பார்த்திபோ போஸ் என்பார் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வு இதனை தெரிவிக்கிறது.
பெரும்பாலான தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வது பூக்களில் மகரந்த சேர்க்கை வழி தான். இந்த மகரந்த சேர்க்கை என்பது ஒரு பூவிலிருந்து மற்றொரு தாவர பூவிற்கு மகரந்தம் செல்வது எனும் அயல் மகரந்த சேர்க்கை மற்றும் ஒரு தாவரத்தின் ஒரு பூவிலிருந்து அதே தாவரத்தின் மற்றொரு பூவிற்கு மகரந்தம் செல்வது எனும் தான் மகரந்த சேர்க்கை என இரு வகைப்படும். இரண்டு வகை மகரந்த சேர்க்கையும் தானே நடைபெறாது, தாவரத்திற்கு மகரந்த சேர்க்கை நடைபெற்று இனப்பெருக்கம் செய்ய துணை தேவை.
அரிசி, கோதுமை போன்ற புல் வகை தாவரங்களுக்கு, அதாவது தானிய விளைச்சல் தரும் தாவரங்களுக்கு காற்று தான் துணை. இவற்றின் பூக்கள் மிக சிறிதாய், கண்களுக்கு புலப்படத அளவில் இருக்கும். மென் காற்று வீசும் போது பூக்களின் மகரந்தம் அடித்து செல்லப்பட்டு அடுத்த தாவரத்தில் படியும். இவ்வாறு இந்த வகை தாவரங்களில் மகரந்த சேர்க்கை இயல்பில் நடைபெறும். காற்று தான் இந்த வகை தாவரங்களுக்கு துணை.
ஆனால் வேறு பல தாவரங்களில் மகரந்த சேர்க்கை நடைபெற பூச்சிகளின் உதவி தேவை. பொதுவாக தேனீ, வண்டு, பட்டாம் பூச்சி என பல்வேறு வகை பூச்சிகள் மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன. பூவின் தேன் குடிக்க வரும் தேனீ அதன் கால்களில் மகரந்தத்தை எடுத்துச் சென்று மற்றொரு பூவில் அமரும்போது அந்த பூவில் மகரந்தத்தை செலுத்துகிறது. இவ்வாறு மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது. அயல் மகரந்த சேர்க்கை, தான் மகரந்த சேர்க்கை இரண்டிற்கும் பூச்சியினம் இன்றியமையாதது.
பெருமளவு தானிய பயிர்களுக்கு பூச்சிகள் மகரந்த சேர்க்கைக்கு அவசியமில்லை என்றாலும், பல்வேறு காய் கனிகள் பயிர் செய்ய தேனீயின் உதவி அவசியம். பூசணி, பரங்கி, வெள்ளரிக்காய் என பல்வேறு காய்கனி தாவரங்கள் விளைச்சல் தர பூச்சிகள் அவசியம். தான் மகரந்த சேர்க்கை ஏற்படும் கத்தரிக்காய் போன்ற தாவரத்திலும், உள்ளபடியே அயல் மகரந்த சேர்க்கை நடைபெற்றால் சூல் கொள்ளுதல் மிகுந்து அதிக பூ காய் தரும். எனவே மகசூல் அதிகரிக்கும்.
வகை தொகை இல்லாமல் பூச்சிமருந்து பயன்படுத்துவதால் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பூச்சியினம் அழிந்து இந்தியாவில் விளைச்சல் மட்டுபட்டுள்ளது என பார்த்திபோ போஸ் அவர்களின் ஆய்வு தெரிவிக்கிறது. மேலை நாடுகளில் தேனீ வளர்ப்பு என்பது பரவலாக நடைபெறுகிறது. எனவே இதுகாறும் செயற்கையாக வளர்க்கப்படும் தேனீக்கள் அருகில் உள்ள வயல் வெளிகளில் மகரந்த சேர்க்கைக்கு உதவி விளைச்சலை பெருக்கி வந்தது. சமீபத்தில் அங்கு பெருமளவு செயற்கை தேனீ கூடுகள் பதிக்கபட்டு தீடீர் என தேனீக்கள் மடிந்தன. இதன் தொடர்ச்சியாக அங்கு சமீப ஆண்டுகளில் மகசூல் பெருமளவு பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்துள்ளது. ஐரோப்பா அமெரிக்க முதலிய நாடுகளைப் போல செயற்கை தேனீ வளர்ப்பு இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் இல்லை. எனவே இங்கு இயற்கை தேனீ மற்றும் பூச்சிகள் பயிர் தொழிலுக்கு மிக அவசியம்.
ஒவ்வொரு ஆண்டும் பூச்சியினத்தின் நிலை அறிந்து, அந்த ஆண்டு ஏற்படும் காய்கனி விளைச்சலை அதனுடன் ஒப்பிட்டு பார்த்து ஆராய்வது தான் சால சிறந்ததது. பூச்சிகள் அருகும் போது விளைச்சல் குறைகிறது. பூச்சிகள் பெருகும் போது விளைச்சல் கூடுகிறதா என அறியமுடியும். ஆனால், இந்தியாவில் பூச்சியினங்களின் நிலை குறித்த ஆய்வு விவரங்கள் இல்லை. எனவே நேரடியான ஆய்வு சாத்தியமில்லை. இதன் காரணமாகத்தான், நேரடியான ஆய்வுக்கு பதிலாக மறைமுக ஆய்வு நடத்த திட்டமிட்டனர்.
தமது ஆய்வுக்காக பூச்சியினால் மகரந்த சேர்க்கை ஏற்படும் தாவரம், மற்றும் காற்றினால் மகரந்த சேர்க்கை ஏற்படும் தாவரம் இரண்டையும் எடுத்துக் கொண்டனர். நவீன விவசாய முறையில், பூச்சிகொல்லி, வேதி உரம் முதலியன இட்டு பயிர் தொழில் செய்யும் போது, இடு பொருள் கூட கூட காற்றினால் மகரந்த சேர்க்கை ஏற்படும் பயிர்களில் விளைச்சல் உயர்ந்துகொண்டே சென்றது. மண் தான் செழிப்பை இழப்பது போன்ற காரணங்களினால் விளைச்சல் விகிதம் சற்றே குறைந்தாலும், மொத்த விளைச்சல் கூடியது. ஏக்கருக்கு பயிர் விளைச்சல் தரும் மகசூல் கூடியது.
ஆனால் பூச்சிகளால் மகரந்த சேர்க்கை ஏற்படும் பயிர்களில் பூச்சிமருந்து வேதி உரம் முதலிய முதலில் விளைச்சலை பெருக்கினாலும், காலப் போக்கில் விளைச்சல் பெருகவில்லை. ஏக்கருக்கு மகசூல் குறைந்தது என்பது புலனாகியது. அதாவது, வேதி பொருள் கொண்டு நடத்தப்படும் விவசாயத்தினால் பூச்சிகள் பாதிக்கப்பட்டு விளைச்சல் மட்டுப்பட்டது என்பது குறிப்பால் விளங்கியது.
விவசாயத்தில் நேரடியாக புலப்படும், நீர், மண், பதிப்பு தரும் பூச்சி தொல்லை முதலிய தவிர கண்களுக்கு புலப்படாத மகரந்த சேர்க்கையும் முக்கியமானது என இந்த ஆய்வு நமக்கு தெரிவிக்கிறது.
உலகில் சுமார் 146 நாடுகளின் 90 சதவிகித உணவு தேவையை பூர்த்திசெய்யும் நூறு தாவரங்களில் எழுபத்தொன்று தாவரங்கள் பூச்சியினால் மகரந்த சேர்க்கை ஏற்படும் தாவரங்கள் ஆகும். இதிலிருந்து மகரந்த சேர்க்கை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 7.5 டன் காய்கனி உற்பத்தியாகிறது. உலக காய்கனி உற்பத்தியில் இது 14 சதவீதம் ஆகும். சீனாவிற்கு அடுத்தபடியாக உலகில் இரண்டவது இடத்தில் உள்ள நாடு இந்தியா. மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சியினங்கள் அருகினால் இந்திய விவசாயம் பெருமளவு பதிக்கப்படும் என்பது திண்ணம். உணவு உற்பத்தி குறைந்தால் உணவு பாதுகாப்பு மட்டுப்படும் பஞ்சநிலை ஏற்படலாம் என அறிஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வேதிப்பொருள் சார்ந்து நடைபெறும் இன்றைய விவசாயமுறை நிலைதகு முறையல்ல என கூறும் பர்த்திபோ போஸ், சூழலியல் விவசாய முறைக்கு நாம் மாறவேண்டும் என அறிவுறுத்துகிறார். சூழலியல் விவசாய முறை என்பது பண்டைய முறைக்கு செல்வதல்ல என விளக்கும் போஸ், இயற்கையில் தாவர வளர்ச்சி குறித்து அறிந்து, சூழலியல் பார்வையில் மிகு நவீன அறிவியலின் பயன்பாடே சூழலியல் விவசாயம் என கூறுகிறார்.
பூச்சிகொல்லி மருந்து பயன்படுத்திட வேண்டுமென்றாலும், எந்த நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை தெளிப்பது என்பதில் தேர்வு வேண்டும். பொதுவாக அதிகாலையில் நன்மை தரும் பூச்சிகள் மற்றும் தேனீக்கள் இயங்காது. எனவே அதிகாலையில் பூச்சிமருந்தை அடித்தால் ஒரளவு நன்மை பயக்கும் பூச்சிகளை தீங்கிலிருந்து பாதுகாக்கலாம். சில தாவரங்களின் பூக்கள் நண்பகலில் இதழ் மூடிக் கொள்ளும் தன்மை வாய்ந்தவை. இந்த தாவரம் பயிரிடப்படுள்ள நிலத்தில் மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சிகள் இதழ் மூடிய நண்பகலில் பூவை அண்டாது. எனவே இங்கு நண்பகலில் பூச்சி மருந்தை அடிப்பதே சிறந்தது. இவ்வாறு பூச்சிகள் இயக்கம், தாவர இயல்பு முதலிய அறிந்து அளவோடு பூச்சிமருந்தை பயன்படுத்துவது அறிவுடைமை என்கின்றனர் சூழலியல் வேளாண்மை ஆய்வாளர்கள்.
உள்ளபடியே இன்று அளவுக்கு அதிகமான பூச்சி மருந்து மற்றும் உர பயன்பாடு விழலுக்கு இறைத்த நீர் போல எதிர்மறை விளைவை தருகிறது. தீமை பயக்கும் பூச்சிகளை மட்டுமல்ல நன்மை தரும் பூச்சிகளையும் கொல்கிறது. உரம் தாவர வளர்ச்சிக்கு உதவுவது தவிர மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை பாதித்து மண் செழிப்பை நசிக்கிறது. கண்மூடித்தனமான பூச்சிகொல்லி மருந்து பயன்பாடு, உர பயன்பாடு முதலிய தவிர்த்து, தாவரமும், நன்மை தரும் பூச்சிகளும் தீங்கு தரும் பூச்சிகளும் எவ்வாறு ஒன்றோடு ஒன்று உறவாடுகிறது என்பதை புரிந்து விவசாயம் செய்வதே சூழலியல் விவசாயம். இதற்கு நுட்பமான நவீன சூழலியல் அறிவு அவசியம்.
புதுவை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இயக்கி வரும் CERD எனும் ஆய்வு நிறுவனத்தில் முதலில் இத்தகு சூழலியல் விவசாய ஆய்வு பணிகளை துவங்கி பின்பு கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் சூழலியல் துறையில் விஞ்ஞானியாக பணிபுரிபவர் முனைவர் பார்த்திபோ போஸ் என்பது குறிப்பிடத் தகுந்தது. இவரது இந்த ஆய்வு முடிவு சமீபத்தில் இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சர்வதேச சூழலியல் கருத்தரங்கு ஒன்றில் சமர்பிக்கபட்டது.
நன்றி: செம்மலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக