Translate

திங்கள், டிசம்பர் 26, 2011


சாதனைப் பெண்கள்:இந்தியாவின் பார்வையை தமிழகம் பக்கம் திருப்பிய திவ்யதர்ஷினி!

kalvisalai-26-12-2011, 2011
Success Secrets of IAS first ranker Divyadharshini - Women Secrets of Success
ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்தியாவிலேயே முதல் 'ரேங்க்' பெற்று, தேசத்தின் ஒட்டுமொத்தப் பார்வையை தமிழகம் பக்கம் திருப்பியவர் திவ்யதர்ஷினி. 'சிவில் சர்வீஸ்' மாணவர்கள், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என ஒவ்வொருவர் உச்சரிப்பிலும் பேசப்பட்டவர்.
வெற்றிப் பூரிப்பில் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இயல்பாகவும், எளிமையாகவும் வலம் வரும் அவர், இந்த அவையடக்கத்திலும் பலருக்கு முன்மாதிரியாகவே தெரிகிறார்.
திவ்யதர்ஷினியின் பெற்றோர் சண்முகம் - பத்மாவதி. தந்தை தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர். தாய் இல்லத்தரசி. இவருக்கு பிரியதர்ஷினி என்ற அக்காவும், கோபிநாத் என்ற தம்பியும் உள்ளனர். வீடு சென்னை நுங்கம்பாக்கத்தில். படித்தது எழும்பூரில் உள்ள ஆசான் மெமோரியல் பள்ளியில். படிப்பில் முதல் 10 ரேங்கிற்குள் வரும் மாணவியாக இருந்தார்.
பள்ளிப்படிப்பு முடிந்ததும் சட்டம் பயிலுவதற்காக சென்னை சட்ட பல்கலைக் கழக கல்லூரியில் சேர்ந்தார். இறுதியாண்டு படித்தபோதுதான் அவருக்கு சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. முதல் முயற்சியில் கிடைத்தது நல்லதொரு அனுபவம் மட்டுமே. அதுவே அடுத்தகட்ட முயற்சிக்கு துணையாக அமைய, இரண்டாம் முறை தேர்வெழுதி முதல் ரேங்க் என்ற உச்சத்தை தொட்டிருக்கிறார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான பயிற்சிமுகாமிற்கு முசவுரிக்கு கிளம்ப தயாராக இருந்த திவ்யதர்ஷினி நம்முடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். வெற்றிப் பயணம் குறித்து அவரோடு பேசியதிலிருந்து...
நீங்கள் தேர்வு செய்து படித்த பாடம்...
பப்ளிக் அட்மினிஸ்ட்ரேசன் மற்றும் சட்டம்
உங்கள் முயற்சியும் பலனும்...
சட்டப்படிப்பில் இறுதியாண்டு (2009) படித்துக் கொண்டிருந்தபோதுதான் எனக்கு சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அப்போதே படிக்கத் தொடங்கிவிட்டேன். ஆனால் கல்லூரியில் இறுதித் தேர்வு வந்த சமயத்தில், சிவில் சர்வீஸ் தேர்வும் வந்ததால் அதில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. கல்லூரிப் படிப்பிலேயே கவனம் செலுத்துவதென்று முடிவு செய்து அதை முதலில் முடித்தேன். 2010-ம் ஆண்டு முழு முயற்சியுடன் மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வை எதிர் கொண்டேன். ஜெயித்து விட்டேன்.
நேர்முகத் தேர்வு அனுபவங்களை சொல்லுங்கள்...
நேர்முகத் தேர்வில் 'பெர்சனாலிட்டி' சம்பந்தப்பட்ட கேள்விகளே கேட்டார்கள். நாட்டு நடப்புகள், சூழலுக்கு ஏற்ப எப்படி செயல்படுவீர்கள்? என்பது போன்ற கேள்விகளே அதிகம்.
கேட்டகேள்விகள் எல்லாவற்றுக்கும் தயக்கமின்றி பதிலளித்தேன். வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் முதல் ரேங்க் வாங்குவேன் என்பது நானே எதிர்பார்த்திராத ஆனந்தம்..
முதல் ரேங்க் அறிவிக்கப்பட்ட அந்த நிமிடத்தில்...
எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால் பெற்றோர் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். தோழிகளும் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தார்கள். உடனே 'கேக்' வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தார்கள். கேக் வெட்டி ஊட்டி விட்டார்கள். முன்பின் தெரியாதவர்கள்கூட வாழ்த்துச் சொன்னார்கள். இப்போதுகூட வெளியே செல்லும்போது 'நீங்க முதல் ரேங்க் வாங்கின பொண்ணுதானே' என்று பலரும் வாழ்த்துச் சொல்கிறார்கள். பெற்றவர்களை சந்தோஷப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சிதான்.
ஊக்கம் கிடைத்தது எப்படி?
நான் திடீரென்றுதான் சிவில் சர்வீஸ் படிக்கப்போவதாக அப்பாவிடம் கூறினேன். உன் விருப்பம் போல் படி என்று கூறிவிட்டார்கள். நல்ல ஆதரவு தந்தார்கள். சுதந்திரமாக விட்டார்கள். என்னை அர்ப்பணித்துப் படித்தேன். பலன் கிடைத்தது.
சிவில் சர்வீஸ் படிக்கும் மாணவர்கள் சினிமா பார்ப்பது போன்ற பொழுதுபோக்கு விஷயங்களை தவிர்க்க வேண்டுமா?
யு.பி.எஸ்.சி. தேர்வுக்குப் படிப்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு படிப்பதுபோல் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நிஜம்தான். ஐ.ஏ.எஸ். பரீட்சை ஈஸி அல்ல. ஆனால் மாணவர்கள் நினைப்பதுபோல ரொம்ப கஷ்டமானதும் அல்ல. நாம் சரியாக முயற்சி செய்தால் எளிதாக வெற்றி பெறலாம். இதை எப்படிச் சொல்வதென்றால் கஷ்டப்பட்டுப் படிக்காமல் இஷ்டப்பட்டு படித்தால் ஈஸியாக ஜெயிக்க முடியும்.
என்னைப் பொறுத்தவரை எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பதை விட எவ்வளவு ஆழமாக புரிந்து படிக்கிறோம் என்பதே வெற்றிக்கு வித்திடுகிறது. கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, விடா முயற்சி மூன்றும் இருந்தால் எல்லோரும் வெற்றி பெறலாம்.
ஐ.ஏ.எஸ். மாணவர்கள் எங்கு தடுமாறுவதாக நினைக்கிறீர்கள்?
பிரிமிலினரி என்ற ஆரம்பநிலைத் தேர்வில்தான் நிறைய மாணவர்கள் தடுமாறுகிறார்கள். ஏனெனில் இது போட்டித் தேர்வாகும். தேர்வு செய்ய  வேண்டியவர்களைவிட பல மடங்கு பேர் போட்டியிடுவதால், தகுதியானவர்களை தேர்வு செய்யும் வடிகட்டும் விதமாக கடினமான கேள்விகளே கேட்கப்படுகிறது. எனவே பிரிலிமினரி தேர்வுக்காக மாணவர்கள் கூடுதல் முயற்சி எடுத்து படித்தால் நிறைய பேர் ஜெயிப்பார்கள்.
யு.பி.எஸ்.சி. தேர்வுக்குப் படிப்பவர்கள் தினசரி செய்ய வேண்டியது என்ன?
தினசரி பேப்பரை கண்டிப்பாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 2 முதல் 3 மணி நேரத்தை படிப்பதற்கு செலவிட வேண்டும். இப்படி தொடர் உழைப்பையும், விடா முயற்சியையும் தினமும் கடைபிடித்தால் வெல்வது உறுதி.
பெற்றோர் தங்கள் குழந்தைகளை டாக்டர், என்ஜினீயர், ஐ.ஏ.எஸ். என்று ஏதாவது ஒரு சில இலக்கை நோக்கி மட்டும் விரட்டுகிறார்களே?
மதிப்பு மிக்கதும், வருவாய் தருவதுமான தொழில்களையே மக்கள் விரும்புகிறார்கள். நிச்சயமாக எந்த தொழிலும் தாழ்ந்ததல்ல. "எந்தப் பதவிக்கும் ஒரு தனிப்பட்ட மதிப்போ, அதிகாரமோ கிடையாது. அது அந்த இடத்தில் அமருபவரின் தகுதிக்கு ஏற்பத்தான் அந்தப் பதவி மதிப்பும், அதிகாரமும் பெறுகிறது" என்று அப்துல்கலாம் சொல்வார். அதுபோல உங்கள் செயல்தான் நீங்கள் செய்யும் பணிக்கு பெருமை சேர்த்துத் தரும்."
படிப்பு தவிர்த்து உங்கள் ஆர்வம் எதிலெல்லாம் இருக்கிறது?
பள்ளி கல்லூரி காலங்களில் பல விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். வாலிபால், எறிபந்து, தட்டு எறிதல் போன்ற போட்டிகளில் சில சான்றிதழ்களும் வாங்கியிருக்கிறேன். புத்தகங்கள் படிப்பது, பாட்டுக் கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது போன்றவை என் பொழுதுபோக்குகள்.
ரோல்மாடல் யார்?
அப்துல்கலாம் அவர்களை எனது ரோல்மாடலாக நினைக்கிறேன். அவரது பேச்சு, எழுத்து, செயல், புத்தகம் அனைத்துமே இளைஞர்களுக்கு, தன்னம்பிக்கையை தூண்டுவதாக உள்ளது.
நமது சமூகத்தில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் பற்றி?
மக்களிடம் எந்த விஷயத்தைப் பற்றியும் விழிப்புணர்வு இல்லை. ஒவ்வொருவருக்குள்ளும் விழிப்புணர்வு வரும்போது நாடு முன்னேற்றம் அடைந்து விடும். நான் நகர்ப்புறத்தில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும்போது அங்குள்ள மக்கள் போதிய வசதிகள் இல்லாமல் இருப்பதை நன்கு உணர்கிறேன். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிற அளவுக்கு மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று விரும்புகிறேன்.
நீங்கள் விரும்பும் மாற்றத்தை கொண்டு வர உங்கள் முயற்சி எப்படியிருக்கும்?
ஐ.ஏ.எஸ். ஆக தேர்வானவர்களை ஒவ்வொரு துறைக்கும் தலைமைப் பொறுப்புகளில் நியமித்தாலும் மாவட்ட கலெக்டராக நியமனம் பெறுபவர்களிடம் மட்டுமே அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை கொண்டு வரும் அதிகாரம் இருக்கிறது. எனவே மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று பணி செய்தால் தேவையான மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று நம்புகிறேன். எந்த துறையில் இருந்தாலும் என்னால் முடிந்த சமூக சேவைகளை செய்வேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக