Translate

புதன், டிசம்பர் 28, 2011


'பெண் கல்வி' சுதந்தரத்திற்கு முன்னும், பின்னும்! (

Women's Day Special Article: Women Education in India after Independence

)
Women's Day Special Article: Women Education in India after Independence - Tamil Katturaikal - General Articles
திரும்பிப் பார்ப்பது எப்போதுமே சுகமான விசயம்தான். அது தனிப்பட்டவர்களின் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, வரலாற்றின் பக்கங்களாக இருந்தாலும் சரி. இன்றைக்குப் பெண்கள் இல்லாத துறையே இல்லை எனலாம். இன்று மகளிர் தினம் கொண்டாடும் வேளையில் தாய்நாடாம் இந்திய நாட்டின் 64வது சுதந்திர தினம் தலைநகர் டெல்லியில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டதை நாம் திரும்பிப்பார்த்தால் அந்த காட்சி நம் அனைவரின் கண்களுக்கும் விருந்தாக அமைந்தது என்பது நிதர்சனம். அதிலும் எந்த கட்சியின் சாயத்தையும் பூசிக்கொள்ளாத பெண்களாகிய நமக்கு, நம் தேசத்தின் ஜனாதிபதியான திருமதி. பிரதிபா பாட்டீல், அரசாளும் கட்சியின் தலைவரான திருமதி. சோனியா காந்தி, சபாநாயகரான திருமதி. மீரா குமார் போன்ற பெண்கள் அனைவரும் இவ்விழாவில் அமர்ந்திருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது இல்லையா? கடந்த நாட்களில் தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக நடத்தப்பட்ட நம் நாட்டுப் பெண்கள் எப்படி இந்த அளவிற்கு உயர்ந்தனர் என்பதை ஆராய்ந்து பார்த்தால் 'கல்வியே' என புலப்படும். 'கல்விக்கண்' என்று ஆன்றோரால் அழைக்கப்படும் கல்வியே நம் மக்களின் கண்களைத் திறந்தது எனக் கூறலாம். நம் தேசத்தின் பிதா என அழைக்கப்படும் மகாத்மா காந்தி இதனை நன்கு உணர்ந்ததினால் தான் "ஒரு ஆண் மகன் கல்வி கற்றால் அவனுக்கு மட்டுமே நன்மை பயக்கும். ஆனால் குடும்பத்திலுள்ள ஒரு பெண் கல்வி கற்றால் முழுக் குடும்பமும் நன்மை பெற்றுக்கொள்ளுகிறது. சமுதாயத்திலுள்ள அனைத்து பெண்களும் கல்வி கற்றுக்கொள்ளும் போது, சமுதாயம் முழுவதும் நன்மை பெறுகிறது; அதிநிமித்தம் தேசம் வளர்ச்சி அடைகிறது" எனக் கூறினார்.
சமுதாயத்தில் பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது என நாம் ஆராய்ந்து பார்த்தால் ஆண்களுக்கு எப்பொழுதும் உயர்வான அல்லது தலைமை இடங்கள் அளிக்கப்பட்டது. ஆனால், பெண்களுக்கோ அடிப்படை வசதிகளும், உரிமைகளும்கூட மறுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்ட காலங்களுமே அதிகமாக ஆதிக்கத்திலிருந்ததை சரித்திரத்தின் வாயிலாக அறிந்துகொள்ளலாம். நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன், பெண்களுக்குக் கல்வி முற்றிலும் மறுக்கப்பட்டது. 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?' என்பதே அனைவரது கருத்தாக இருந்தது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரும் உரிமை மறுக்கப்பட்ட காலத்தில் தான் நம் நாட்டின் முதல் பெண் டாக்டராக திருமதி. முத்துலட்சுமி ரெட்டி என்பவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பெண் டாக்டராகப் பயிற்சி பெற்று சரித்திரம் படைத்தார். பின்னர் அரசின் உதவித் தொகையால் வெளிநாடு சென்று உயர் கல்வி பெற்ற முதல் இந்தியப் பெண்மணி (தென்னிந்தியப் பெண்மணி) என்ற பெருமையும் இவரை சேரும். பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டாத அரசாங்கம் அக்கால கட்டத்தில் பெண்கள் கல்வி கற்றே ஆக வேண்டும் என்று எண்ணியதற்குக் காரணங்கள் உண்டு. அறியாமை என்னும் இருட்டில் வேதனையுடன் காலங்கழித்த பெண்கள் சிந்திக்கவும், செயல்படவும், ஏதுவான கல்வி இல்லாமையினிமித்தம் உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், பெண்சிசு கொலை, தேவதாசி வாழ்க்கை போன்ற பல்வேறு சமுதாயக் கொடுமைகளுக்கு ஆளாகி அடிமைகளாக வாழ்ந்த அக்காலக்கட்டத்தில் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார், வீறு கொண்டு எழுந்ததிநிமித்தமே அரசாங்கம் அவர்களை ஊக்குவித்து, வெளிநாடு சென்று கல்வி பயிலுவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது. சென்னையிலுள்ள 'அடையாறு புற்றுநோய் மருத்துவமனை' இவரால் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிக், யஜுர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் தோன்றிய காலத்தில் பெண்களுக்கும் அவைகளைக் கற்றுக் கொடுத்தனர். பின்னர் பெண்களுக்கு அக்கல்வி மறுக்கப்பட்டுவிட்டது. ஆங்கிலேயர் நம் நாட்டை அரசாண்ட காலத்தில் பெண்களுக்குக் கல்வியறிவைப் புகட்டுவது மிகவும் அவசியம் என அவர்களால் வலியுறுத்தப்பட்டதின் நிமித்தமும், நம் நாட்டின் சமுதாயப் புரட்சியாளர்கள் எனக் கருதப்பட்ட ராஜாராம் மோகன்ராய், சந்திர வித்யாசாகர், ஈ.வே.ரா. பெரியார், அம்பேத்கர், ஃபுளே (Phule) போன்றவர்களின் விடாமுயற்சி மற்றும் எழுச்சியூட்டும் கருத்துகளினாலும், பெண்களுக்கு கட்டாயக் கல்வி ஆரம்பிக்கப்பட்டது.
சுதந்திரம் பெற்ற பின்னர் நம் அரசாங்கம் எடுத்துக்கொண்ட பல்வேறு முயற்சிகளிநிமித்தம் பெண் கல்வி உயிர்மீட்சி அடைந்தது, அதனால் ஆண்களின் கல்வி வீதத்தைக் காட்டிலும் பெண்களின் வீதம் அதிகரித்திருப்பதை 1971, 2001ம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. 22% விழுக்காடாக இருந்த பெண்களின் கல்வி 2001ஆம் ஆண்டில் 55%ஆக அதிகரித்துள்ளதே இதற்குச் சான்று, அதாவது ஆண்களின் கல்வி வளர்ச்சி 11.72 சதவீதம் என்றும் பெண்களின் கல்வி வளர்ச்சி கிட்டத்தட்ட 15%ஆகவும் அதிகரித்துள்ளதை இக்கணக்கீடு நமக்குத் தெரிவிக்கின்றது. இந்நாட்களில் அநேக வீடுகளில் தாய்மார்கள் தங்கள் பெண் பிள்ளைகளின் கல்வியைக் குறித்து கரிசனைப்படுவதால்தான் எதையும் விற்றாவது அவர்களுக்குக் கல்விச் செல்வத்தைக் கொடுக்கும்படி ஓடியாடி அலைவதை நாம் காண முடிகிறது. இவர்களுடைய அறிவுக் கண்கள் திறக்கப்பட்டதால் தானே தனக்குப் பின் வரும் சந்ததியும் அறிவுச் செல்வங்களாக வாழ வழி செய்கிறார்கள்!
நம் நாட்டில் தலைசிறந்து விளங்கின பல பெண்மணிகளே இதற்குச் சான்றாவார்கள். இந்தியாவின் முதல் பெண் கவர்னர் என்ற அந்தஸ்தைப் பெற்ற திருமதி. சரோஜினி நாயுடு முதல் பெண் UNO பிரசிடெண்ட் விஜயலட்சுமி பண்டிட், பிரதமர் இந்திரா காந்தி, பச்சேந்திரி பால் (Bachendri Pal) என்னும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்மணி, முதல் பெண் நீதிபதியான ஃபாத்திமா பீவி மற்றும் விண்வெளியில் வெற்றி கண்ட கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், விளையாட்டு வீராங்கனை P.T. உஷா, ஷைனி போன்ற பல பெண்மணிகள் ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல; பெண்களால் எல்லாம் முடியும் என நிரூபித்துள்ளனர். இன்று அனைத்துத் துறையிலும் சென்று தங்கள் திறமை, கடின உழைப்பு, மற்றும் சாதுரியத்தினால் வீட்டை மட்டுமின்றி அலுவலகம், தொழிற்சாலை, நீதிமன்றம், கல்வித்துறை, அரசாங்கம் போன்ற அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதன் காரணம் அவர்களது படிப்புத் திறன்தான் என்பதில் ஐயமில்லை. அரசியலிலும் (நாடாளுமன்றம் மற்றும் பாராளுமன்றம்) பெண்களின் ஈடுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறதைக் காண்கிறோம். பெண்களின் 33% இடஒதுக்கீடே இதற்குச் சான்றாகும்.
படிப்பறிவு எனும் தீ நம் நாட்டின் எல்லா மூலை முடுக்குகளிலும் பறந்து, பற்றி எரிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு கீழ் வரும் சம்பவம் ஒரு உதாரணம்: அதாவது மிகவும் பின்தங்கிய புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்களுக்குக் கட்டாயக் கல்வி கொடுக்கப்பட்டதிநிமித்தம் வீட்டினுள் அடைபட்டிருந்த பெண்கள் வெளிவந்து மிதிவண்டி (Cycle) ஓட்டக் கற்றுக்கொண்டு 'கல் உடைக்கும் தொழிற்சாலைகளை' அவர்களே நிர்வாகம் பண்ணுமளவிற்கு உயர்ந்துள்ளனர்.
சுதந்திர இந்தியாவில் வாழும் பெண்களாகிய நாம் இன்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம் எனக் கூறினால் அது நமக்குக் கிடைத்திருக்கிற 'கல்வியறிவே'. வீட்டிலும் சமுதாயத்திலும் நாட்டிலும் பெண்களின் திறமையை அறிந்து பதவிகளைக் கொடுத்து கௌரவிக்கப்படுகிறார்கள். அதற்குச் சான்று பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை பார்லிமெண்டில் நிறைவேற்றியது ஆகும்.
மற்றவர்களுக்கு ஒளிவீசும் தன்னலமற்ற கலங்கரை விளக்கமாக ஒரு பெண் தன் கல்வி அறிவினால் தன் வீட்டாருக்கு மட்டுமின்றி தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் அறியாமை என்கிற இருட்டை அகற்றி வெளிச்சமடையச் செய்வாள் என்பதில் சந்தேகமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக