சாதனைப் பெண்கள்:கடுமையான உழைப்பே வெற்றிக்கு சிறந்த வழி! - சாய்னா நெவால்
பேட்மிண்டன் போட்டியில் மிக இளம் வயதில் அதிக தங்கம் வென்று, தங்க மங்கையானவர் சாய்னா நெவால். 21 வயதான இவர் கேல் ரத்னா விருதும், காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கமும் வென்றவர்.
பேட்மிண்டன் தரவரிசையில் தொடர்ந்து முன்னணி வீராங்கனையாக நிலைத்து வரும் சாய்னா, 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல நிறைய வாய்ப்பு இருப்பதாக விளையாட்டுத் துறை நிபுணர்கள் கணிக்கிறார்கள்.
அவரது வாழ்க்கைப் பயணம் இங்கே...
1990-ம் ஆண்டு நவம்பர் 17-ந்தேதி அரியானா மாநிலத்தில் உள்ள கிசார் என்ற ஊரில் பிறந்தார். பெற்றோர் பெயர் ஹர்விர் சிங் - உஷா நெவால். இவரது தந்தை விஞ்ஞானி. எண்ணைவித்து ஆராய்ச்சி மையத்தில் இயக்குநராக இருக்கிறார். சாய்னாவின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக அவர்கள் ஐதராபாத்தில் குடியேறினார்கள்.
8 வயதிலேயே சாய்னா பேட்மிண்டன் விளையாட தொடங்கிவிட்டார். அப்போது அவரை அவரது தந்தை நானி பிரசாத் என்ற பயிற்சியாளரிடம் அழைத்து சென்றார். சாய்னாவின் ஆர்வத்தையும் திறமையையும் கண்ட பயிற்சியாளர் உடனே பயிற்சி கொடுக்க சம்மதித்துவிட்டார்.
2002-ம் ஆண்டு முதல் தன் திறமையால் வேகமாக வெற்றிகளை குவிக்கத் தொடங்கினார். வெற்றிகளை குவித்துக் கொண்டே வந்ததால் அவருக்கு பண உதவி செய்ய பல நிறுவனங்கள் போட்டிபோட்டன. தற்போது அவர் 'ஒலிம்பிக் கோல் கெஸ்ட்' என்ற அமைப்பின் ஆதரவில் விளையாடி வருகிறார்.
2009 ஜூன் 21-ந்தேதி சாய்னா ஒரு சாதனை படைத்தார். முன்னணி தரவரிசை வீரரான சீனாவைச் சேர்ந்த வாங் லின் என்பவரை மலைக்க வைக்கும் புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனால் இந்தோனேசியா ஓபன் சீரிஸ் பட்டத்தை வென்றார்.
இதே ஆண்டு அவரை அம்மை நோய் பாதித்தது. இருந்தாலும் சகித்துக்கொண்டு ஆவேசமாக ஆடிய அவர் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடந்த உலக சாம்பியன் பட்டத்தையும் வென்றார். அப்போது "என் பெயரையும், சானியா மிர்சா பெயரையும் மக்கள் குழப்பிக் கொள்கிறார்கள். இந்த வெற்றி மூலம் அந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். இது எனது செயல்திறனை வெளிக்காட்டி உள்ளது. எனது பெயரையும், எனது முகத்தையும் பலருக்கும் அறியச் செய்துள்ளது. இனி பெயர் குழப்பம் வராது" என்றார்.
2010 ஜூன் மாதம் நடந்த சிங்கப்பூர் ஓபன் தொடரில் மீண்டும் சூப்பர் சீரிஸ் பட்டம் வென்றார். அதே ஆண்டில் தொடர்ந்து இந்தோனேசியன் ஓபன் தொடரையும் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தார். இந்த தொடர் வெற்றி அவரை தரவரிசையில் 3-வது இடத்துக்கு உயர்த்தியது. அதே ஆண்டு இறுதியிலே ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பட்டத்தையும் வென்றார். அப்போது "கடுமையான உழைப்பே வெற்றிக்கு சிறந்த வழி என்பதை நான் சிறு வயதிலே உணர்ந்துவிட்டேன். அப்போதெல்லாம் நான் பயிற்சிக்காக தினமும் 25 கி.மீ. பயணம் செய்தேன்" என்றார்.
இந்த ஆண்டு தசைநார் பாதிப்புக்காக சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்குப் பிறகு களமிறங்கிய அவர் சுவிஸ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இப்படியே அவருடைய வெற்றிப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக