Translate

வியாழன், செப்டம்பர் 27, 2012

மதுரை

மதுரை (ஆங்கிலம்:Madurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரை, மக்கள் தொகை அடிப்படையிலும்[1], நகர்புற பரவல் அடிப்படையிலும் மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரம். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் மதுரை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்திய துணைக்கண்டத்தில் ஒரு தொன்மையான வரலாறைக் கொண்ட மதுரை நகரம், சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று[2]. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. சங்க காலம் என குறிக்கப்படும் கிமு.3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி. 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழ் மொழி அறிஞர்களை கொண்டு மூன்றாம் தமிழ் சங்கம் அமைக்கப்பட்டு தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை[3].

மௌரிய பேரரசின் அமைச்சர் கௌடில்யர் (கிமு 370 - கிமு 283) மற்றும் கிரேக்க தூதர் மெகஸ்தெனஸ்(350 கிமு - 290 கிமு) ஆகியோரின் குறிப்புகளுடன் துவங்குகிறது மதுரையின் எழுதப்பட்ட வரலாறு. புராதான சின்னமாக பார்க்கப்படும் மதுரை நகரம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. சங்ககாலப் பாண்டியர், இடைக்கால சோழர்கள், பிற்கால சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை சுல்தானகம், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், கர்நாடக ராச்சியம் மற்றும் ஆங்கிலேயர்கள் போன்றோர் மதுரையை ஆண்டுள்ளனர்.

நகரத்தில் பல வரலாற்று நினைவிடங்கள் அமைந்துள்ளன. மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை போன்றவை அவற்றில் புகழ்பெற்றவை. நகரில் ஆண்டு முழுவதும் பல கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. சித்திரை திருவிழா என்று பொதுவாக அழைக்கப்படும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஆண்டு தோறும் 10 நாட்கள் கொண்டாடப்படும் நகரின் முக்கிய விழாவாகும். பத்து லட்சம் மக்களால் கண்டுகளிக்கப்படும் சித்திரை திருவிழாவின் ஒருபகுதியாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. நகரின் ஒருபகுதியான அவனியாபுரம் பகுதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஏறுதழுவல் மற்றும் நகரின் அருகே உள்ள அலங்காநல்லூர் பாலமேடு பகுதிகளில் நடைபெறும் ஏறுதழுவல் நிகழ்ச்சிகள் மாநில அளவில் பெயர்பெற்ற நிகழுவுகள்.

தென்தமிழகத்தின் முக்கிய தொழில்துறை மற்றும் கல்வி மையமாக மதுரை திகழ்கிறது. ரப்பர், ரசாயனம், கிரனைட் போன்ற உற்பத்தி தொழில்கள் மதுரையில் நடைபெறுகின்றன[4]. தகவல் தொழில்நுட்பத்துறையில் இரண்டாம் அடுக்கு நகரமாக பட்டியலிடப்பட்டுள்ள மதுரையில் சில பன்னாட்டு மற்றும் உள்நாட்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளன. மதுரை மருத்துவக்கல்லூரி, மதுரை சட்டக் கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள் நகரில் அமைந்துள்ளன[5]. நகர நிர்வாகம் 1971 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாநகராட்சி அமைப்பின் மூலம் நடைபெறுகிறது.

2011 ஆம் ஆண்டு இந்தியா மக்கட்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட தகவலின் படி மதுரை நகரில் 1,016,885 பேர் வசிக்கின்றனர்[6]. மதுரையில் பன்னாட்டு சேவைகள் வழங்கும் வானூர்தி நிலையமும், தென் மாவட்டங்களில் பெரிய புகைவண்டி நிலையமும் அமைந்துள்ளது. முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளால் மதுரை நகரம் இணைக்கப்பட்டுள்ளது.
புவியியல்

இவ்வூரின் அமைவிடம்9.93° N 78.12° E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 136 மீட்டர் (446 அடி) உயரத்தில் இருக்கின்றது.


வரலாறு

மதுரையை சித்தரிக்கும் 18ஆம் நூற்றாண்டு ஓவியம்

தென்னிந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கிய இடம் மதுரைக்கு உண்டு. முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல சாதனைகளையும் சோதனைகளையும் தாண்டி வந்தது இம்மதுரை நகரம். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையை ஆட்சி செய்த விசயன் என்ற மன்னன் தன்னுடைய பட்டத்தரசியாக மதுராபுரி (மதுரை) இளவரசியை மணந்ததாக இலங்கையின் பண்டைய வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது. பராசக்தியின் வடிவமான அன்னை மீனாட்சி பிறந்து, வளர்ந்து, ஆட்சிசெய்து, தெய்வமான இடமாகக் கருதப்படும் மதுரை, இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களின் மிக முக்கிய சக்தி தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன. தமிழ் வளர்ச்சிக்குத் தனியே சங்கம் வைத்து வளர்த்த பெருமையும் இந்த நகரத்துக்கு உண்டு என்று பழமையான வரலாறுகள் தெரிவிக்கின்றன. மதுரை தமிழின் ஐம்பெருங்காப்பியங்களின் ஒன்றான சிலப்பதிகாரம் கதையின்படி அதன் நாயகி கண்ணகியால் ஒரு முறை எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இலக்கியங்களில் மதுரை

தமிழின் பழமையான இலக்கியங்களான நற்றிணை, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, புறநானூறு, அகநானூறு ஆகிய நூல்களில் மதுரை குறித்து கூறப்பட்டுள்ளன. சில இடங்களில் "கூடல்" என்றும் சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூறு முதலிய நூல்களில் "மதுரை" என்றும் மதுரை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. சங்ககாலத்தில் நான்மாடக்கூடல் எனப் போற்றப்பட்டது (பரிபாடல் திரட்டு 1-3, 6 மதுரை).

மதுரை என்னும் ஊர்ப்பெயர் மருதத்துறை > மதுரை எனக் கொள்ளும் அளவுக்கு வையை ஆற்றங்கரையில் மருத மரங்கள் மிகுதி.[8][9][10]

தமிழ்கெழு கூடல் என புறநானூறும், தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை என்று சிறுபாணாற்றுப்படையில், நல்லூர் நத்தத்தனாரும் மதுரையைப் பற்றி குறிப்பிடுகின்றனர்[11]. ஓங்குசீர் மதுரை, மதுரை மூதூர் மாநகர், தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை, மாண்புடை மரபின் மதுரை, வானவர் உறையும் மதுரை, பதிவெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் என பல்வேறு அடைமொழிகளால் தான் எழுதிய சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் மதுரையை சிறப்பிக்கிறார்.
ஆட்சியாளர்களின் காலவரிசை

மதுரையின் நீண்ட நெடிய வரலாற்றில் மதுரை நகரம் பல்வேறு ஆட்சியாளர்களின் கீழ் இருந்தாலும், பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்கள் காலம் தான் மதுரைக்குப் பொற்காலமாக இருந்திருக்கிறது. கிமு 6 முதல் கிபி 5ஆம் நூற்றாண்டு வரையில் சங்ககாலப் பாண்டியர்கள் வசமும், 5 முதல் 13ஆம் நூற்றாண்டு வரையில் இடைக்காலப் பாண்டியர்கள் வசமும் இருந்த மதுரை, 14 முதல் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை டெல்லி சுல்தான்களின் வசம் இருந்தது. விஜயநகரப் பேரரசு மூலம் அந்த சுல்தான்களின் ஆட்சி முறியடிக்கப்பட்டு 1520 ஆம் ஆண்டில் விஜயநகர ஆட்சியாளர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் நாயக்கர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அவர்கள் ஆட்சியாண்டில் 1623 ஆம் ஆண்டு முதல் 1659 ஆம் ஆண்டு வரையிலான மன்னர் திருமலையின் ஆட்சி மீனாட்சியம்மன் கோயிலுக்கும், மதுரைக்கும் ஒரு பொற்காலமாக கருதப்படுகிறது. நாயக்கர் வம்சத்தின் கடைசி ஆட்சியாளர் இராணி மீனாட்சி தற்கொலை செய்துகொண்டதுடன் நாயக்கர்கள் ஆட்சி வீழ்ச்சியுற்றது. மதுரை 1801 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் வசம் சென்றது.


மக்கள்

பூ வியாபாரம் செய்யும் ஒரு மதுரைவாசி

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,30,015 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[12] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மதுரை மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மதுரை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,041,038 மக்கள் மதுரை மாவட்டத்தில் வசிக்கின்றார்கள். இந்த எண்ணிக்கை கடந்த 2001 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை விட 17.95% அதிகம் ஆகும். இவர்களில் 1,528,308 பேர் ஆண்கள், 1,512,730 பேர் பெண்கள் ஆவர்கள். மதுரை மாவட்டத்தின் மக்கள் தொகையில் 81.66% பேர் கல்வியறிவு பெற்றவர்களாவர். இதில் ஆண்களின் விகிதம் 86.55% ஆகவும் பெண்களின் விகிதம் 76.74% ஆகவும் இருக்கிறது
நகரமைப்பு

தற்போதைய மதுரையின் மையப்பகுதி பெரும்பாலும் நாயக்கர்களால் கட்டப்பட்டதாகும். கோயில், மன்னர் அரண்மனை நடுவிலிருக்க, அதனைச் சுற்றி வீதிகளையும் குடியிருப்புகளையும் அமைக்கும், இந்து நகர அமைப்பான "சதுர மண்டல முறை" மதுரையில் பின்பற்றப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி சில தமிழ் மாதங்களின் பெயர்களில் அமையப்பெற்ற வீதிகள் நகரின் மையமாக உள்ளது.


நகரமைப்பு


மதுரை 1866 ஆம் ஆண்டு முதல் நகராட்சி நிர்வாகமாக ஆக்கப்பட்டது. 1971ல் மதுரை நகராட்சி, மாநகராட்சியாக மேம்பாடு செய்யப்பட்டது. மதுரை நகரின் நிர்வாகம் மதுரை மாநகராட்சியின் வசம் உள்ளது. மாநகராட்சியின் தலைவர் மேயர் (மாநகரத் தந்தை) என்று அழைக்கப்படுகிறார். இவர் தவிர 100 வட்டங்களிலிருந்து (வார்டுகள்) உள்ளன. ஒவ்வொரு வட்டத்திலிருந்தும் ஒரு உறுப்பினர் வீதம் 100 பேர் மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தற்போதைய மேயராக ராஜன் செல்லப்பா மற்றும் துணைமேயராக கோபாலகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார்கள். மதுரை மாநகராட்சி அலுவலகம் வைகை ஆற்றுக்கு வடக்கே அழகர் கோவில் ரோட்டில் தல்லாகுளம் அருகே செயல்பட்டு வருகின்றது.


நிர்வாகம்மதுரை 1866 ஆம் ஆண்டு முதல் நகராட்சி நிர்வாகமாக ஆக்கப்பட்டது. 1971ல் மதுரை நகராட்சி, மாநகராட்சியாக மேம்பாடு செய்யப்பட்டது. மதுரை நகரின் நிர்வாகம் மதுரை மாநகராட்சியின் வசம் உள்ளது. மாநகராட்சியின் தலைவர் மேயர் (மாநகரத் தந்தை) என்று அழைக்கப்படுகிறார். இவர் தவிர 100 வட்டங்களிலிருந்து (வார்டுகள்) உள்ளன. ஒவ்வொரு வட்டத்திலிருந்தும் ஒரு உறுப்பினர் வீதம் 100 பேர் மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தற்போதைய மேயராக ராஜன் செல்லப்பா மற்றும் துணைமேயராக கோபாலகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார்கள். மதுரை மாநகராட்சி அலுவலகம் வைகை ஆற்றுக்கு வடக்கே அழகர் கோவில் ரோட்டில் தல்லாகுளம் அருகே செயல்பட்டு வருகின்றது.
கலாச்சாரம்


நகரின் மத்தியில் கணிசமான அளவில் சௌராஷ்டிர இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தவிர வியாபார நிமித்தமாக பல்வேறு காலகட்டங்களில் குடிபெயர்ந்த வட இந்திய மக்களும் வசித்து வருகின்றனர். இரயில்வே சந்திப்பின் மேற்கே உள்ள இரயில்வே காலனி பகுதிகளில் ஆங்கிலோ-இந்திய மக்கள் மக்களும் வசித்து வருகின்றனர். எனவே நகரில் பலதரப்பட்ட கலாச்சாரங்கள் நிலவுகிறது.
உணவு

தமிழகத்தின் பிற நகரங்களை போலவே மதுரை நகரிலும் முக்கிய உணவாக அரிசி சோறு உள்ளது. இவை தவிர இங்கு பிரியாணி, வெண்பொங்கல், இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி (உணவு) போன்ற உணவுப் பொருட்களும் வடை வகைகளும் நகர மக்கள் விரும்பி உட்கொள்ளும் உணவுப் பொருட்கள் ஆகும். இங்கு சில கடைகளில் கிடைக்கும் இட்லி வகைகளின் தனிப்பட்ட சுவையினால் ''மதுரை மல்லிகை இட்லி' என்ற புனைப்பெயருடன் அறியப்படுகிறது. "ஜில் ஜில் ஜிகர்தண்டா" என்று உள்ளூர் கடைகாரர்கள் அழைக்கப்படும் சீனப் பாசி கலந்த ஒரு வகை குளிர்பானம் மதுரைக்கு வரும் வெளியூர் சுற்றுலாப்பயணிகள் விரும்பி அருந்தும் குளிர்பானமாக உள்ளது.


கல்வி
அமெரிக்கன் கல்லூரி
முதன்மைக் கட்டுரை: மதுரையில் உள்ள கல்வி நிலையங்கள்

இந்தியாவின் பழமையான கல்வி நிறுவனங்களுள் சில மதுரையில் அமைந்துள்ளன. இரண்டு கல்லூரிகள் நூறு ஆண்டுகளுக்கு மேலாகவும், சில கல்லூரிகள் 50 ஆண்டுகளுக்கும் அதிகமாவும் செயல்பட்டு வருகின்றன. மதுரையில் மதுரை பல்கலைக்கழகம் என்கிற பெயரில் பல்கலைக்கழகம் 1966 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. தற்போது இது மதுரை காமராசர் பல்கலைக் கழகமாக செயல்பட்டு வருகிறது. மதுரைக்கு அருகிலுள்ள திருப்பரங்குன்றத்தில் புகழ் பெற்ற பொறியியல் கல்லூரியாக அரசு உதவி பெறும் தியாகராஜர் பொறியியல் கல்லூரி விளங்குகிறது. இது தவிர மதுரையைச் சுற்றிலும் பல சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. சட்டம் தொடர்பான கல்வித் தேவைகளுக்கு மதுரை அரசு சட்டக்கல்லூரி உள்ளது. இந்நகரில் இருக்கும் சேதுபதி மேல்நிலைப் பள்ளி 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. இதில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பணியாற்றியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து

சென்னை-நாகர்கோயில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்நகரம், தென்னிந்திய இரயில்வேயின் மிக முக்கிய சந்திப்பாகும். அதனுடன் நாட்டின் மற்ற முக்கிய நகரங்களை இணைக்கும் விமான நிலையமும் உண்டு. தமிழகத்தின் தலைநகருடன் மதுரையை இணைக்கும் வகையில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவுப் தொடருந்துகள் தினசரி இயக்கப்படுகின்றன. இவை தவிர இங்குள்ள தொடருந்து நிலையத்திலிருந்து மும்பை, சென்னை, பெங்களூர், டெல்லி போன்ற நாட்டின் பிற முக்கிய நகரங்களையும், கோவை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, ராமேசுவரம், கன்னியாகுமரி போன்ற மாநிலத்தின் பிற பகுதிகளையும் இணைக்கும் தொடருந்துகள் மதுரை வழியாக இயக்கப்படுகின்றன.
சுற்றுலா
இந்தோ-செராமிக் பாணியில் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் அரண்மனை தூண்கள்
மீனாட்சி அம்மன் கோயில் குளம்
காந்தி அருங்காட்சியகம்

கோவில் நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம், கூடல் அழகர் பெருமாள் கோவில் போன்ற கோவில்களும் இவை தவிர திருமலை நாயக்கர் அரண்மனை, காந்தி அருங்காட்சியகம், மதுரை, குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி மற்றும் சமணர் மலை என சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்கள் நிறைய இருக்கின்றன. மதுரைக்கு மிக அருகில் அழகர் கோவில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் போன்ற இடங்களும் இந்து மதத்தின் சிறப்புமிக்க சில பாடல் பெற்ற தலங்கள் ஆகும்.

குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி வரும் சுற்றுலா மையமாக மதுரை விளங்குகிறது. இது தவிர வட இந்தியர்களும், தமிழகத்தின் பிற மாவட்ட பயணிகளும் விரும்பி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள சில சுற்றுலா மையங்கள் உள்ளாட்சி அமைப்புகளால் அதிக நிதி ஒதுக்கப்பட்டு வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன. திருமலை நாயக்கர் மகால் பல கோடி செலவிடப்பட்டு ஒலி-ஒளி காட்சி போன்ற அம்சங்களுடன் மீண்டும் புதிப்பிக்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள பிற சுற்றுலாத் தலங்கள்

மதுரைக்குப் அருகாமையில் உள்ள மாவட்டங்களான இராமநாதபுரம் மாவட்டத்தில் புண்ணிய தலங்களில் ஒன்றான இராமேஸ்வரம், சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோயில், ஆவுடையார்கோயில், திருப்பூவணம் பூவணநாதர் கோயில் போன்ற நூற்றாண்டுகள் கடந்த கோவில்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், திண்டுக்கல் மலைக்கோட்டை, தேனி மாவட்டத்தில் சுருளி நீர்வீழ்ச்சி, வைகை அணை மற்றும் இம்மாவட்டத்திற்கு அருகிலுள்ள கேரள மாநில எல்லையில் உள்ள தேக்கடி, மூணாறு போன்றவையும் சில மணி நேரப் பயணத் தொலைவில் உள்ள சுற்றுலாத் தலங்கள் ஆகும்.
தகவல் தொடர்பு

மதுரையில் பி.எஸ்.என்.எல், டாடா, ரிலையன்ஸ், ஏர்டெல் ஆகிய தொலைபேசி நிறுவனங்கள் தொலைபேசி இணைப்பு அளிக்கின்றன. பி.எஸ்.என்.எல், ஹட்ச், ஏர்டெல், டாடா, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் நகர்பேசி இணைப்பு அளிக்கின்றன. இது தவிர இந்நிறுவனங்கள் அகலப்பாட்டைஇணைய இணைப்புகளும் அளிக்கின்றன. அனைத்து தேசிய, அனைத்துலக தொலைக்காட்சிகளும் மதுரையில் தெரிகின்றன. ஸ்டார் விஜய், சன் டிவி, கலைஞர் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி மற்றும் அவற்றின் சிறப்பு அலைவரிசைகளும், எஸ். எஸ் மியூசிக், தூர்தர்சன் பொதிகை ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகளும் மதுரை நகரில் கிடைக்கின்றன. வானொலிகளில் பண்பலை அலைவரிசைகளான சூரியன் பண்பலை, ரேடியோ மிர்ச்சி, ஹலோ பண்பலை ஆகியனவும் அனைத்திந்திய வானொலியின் மதுரை நிலையம் நகரில் செயல்பட்டு வருகின்றன. தினமலர், தினகரன், தமிழ் முரசு, தினத்தந்தி, தினமணி, மாலை மலர் ஆகிய தமிழ் செய்தித் தாள்களும், தி இந்து, தி நியூ இந்தியன் எக்சுபிரசு, டெக்கான் கிரானிக்கிள், டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய ஆங்கில செய்தித்தாள்களும் மதுரையில் பதிப்புகளை கொண்டுள்ளன.
பிரச்சினைகள்

ஒவ்வொருநாளும் பெருகிவரும் இருசக்கர வாகனங்கள், கார்கள் போன்றவற்றின் காரணமாக நகருக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால்கள், முறைப்படுத்தப்படாத போக்குவரத்து விதிகள், வைகை ஆற்றில கலந்துவிடப்படும் பல்வேறு விதமான மாசுபட்ட திட திரவக் கழிவுகள், சாலைகளின் ஓரங்களில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் குப்பைகள் மற்றும் சாக்கடைகள் என பல சவால்களை மதுரை நகரம் எதிர்கொண்டு வருகிறது.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள்
மதுரை நகரின் நெரிசலான சாலைகள்

மதுரை நகர் கடந்த சில ஆண்டுகளாக சந்தித்து வரும் மிக முக்கிய பிரச்சினையாக வைகை ஆறு மாசுபடுவதை சொல்லலாம். மதுரை நகரின் முக்கிய சாக்கடைகள், சிறு தொழிற்சாலைகளின் கழிவுநீர் போன்றவை வைகை ஆற்றில் கலக்கப்படுவதால் வைகை ஆறு மாசடைந்து காணப்படுகிறது. இது தவிர வைகையின் இரு கரைகளிலும் உள்ள மக்கள் குப்பைகளை அதிக அளவில் வைகை ஆற்றுக்குள் கொட்டுவதாலும் ஆறு மாசடைகிறது. இவற்றைப் பற்றி உள்ளூர் நாளிதழ்கள் சுட்டிக்காட்டுவதும், மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக நடவடிக்கை எடுப்பதும் மதுரையில் வாடிக்கையாக நடக்கும் நிகழ்வுகள்.
வைகையாற்றில் கழிவுகள்

மக்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் சாக்கடை நீர், ஆற்றின் கரையோரம் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் மற்றும் நகரின் பல இடங்களில் சேகரிக்கப்படும் மனிதக் கழிவுகள் முதலியன வைகை ஆற்றில நேரடியாக கலந்து விடப்படுகின்றன. இவை தவிர இறைச்சிக் கடை கழிவுகள் முதலிய திடக்கழிவுகளும் ஆற்றுக்குள் கொட்டப்படுகின்றன. இதனால் வைகை ஆறு மாசடைந்து வருகிறது. இதன் உச்சகட்டமாக சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்திற்கு மிக அருகில் பந்தல்குடி கண்மாய் நீர் வைகையாற்றில் கலக்கும் இடம் தற்போது சாக்கடை கலக்கும் இடமாக மாறிவிட்டது. எனவே வருடத்தின் பெருவாரியான நாட்களில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடமும் மாசடைந்து காணப்படுகிறது.
போக்குவரத்து பிரச்சினைகள்

நீண்ட காலத்திற்கு முன்பு வடிவைக்கப்பட்ட நகரின் சில பிரதான சாலைகள் வளர்ந்து வரும் வாகனப் போக்குவரத்தை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. சிம்மக்கல், கோரிப்பாளையம், காளவாசல், பழங்காநத்தம், காமராஜர் சாலை போன்ற இடங்களில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. இதனை மனதில் வைத்து வழிமொழியப்பட்ட பறக்கும் சாலைகள் திட்டம் இன்னும் திட்ட அளவிலேயே இருக்கின்றன. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மதுரை நகருக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் நெரிசலை குறைக்கும் வகையில் புதிய பாலங்கள் எதுவும் இன்னும் அமைக்கப்படவில்லை.

சென்னையை அடுத்து மதுரை மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று சமீபத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு மெட்ரோ ரயில் போக்குவரத்து மதுரை நகருக்கு கிடைக்கும் பட்சத்தில் தற்போதைய போக்குவரத்து பிரச்சினை பெரும்பகுதி குறைக்கப்படும்.
கொண்டாட்டங்கள்
மாரியம்மன் தெப்பத் திருவிழா

மதுரை நகரில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரைத் திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழா சமயத்தில் திருக்கல்யாணம் என்று பரவலாக அறியப்படும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்குதல் என அழைக்கப்படும் வைகையாற்றில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களால் விமரிசையாக கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் சில. சித்திரை திருவிழா தமிழகம் முழுவதும் பரவலாக அறியப்படும் ஒரு திருவிழா ஆகும். தெப்பத்திருவிழா தெப்பத்தில் கொண்டாடப்படும் வருடாந்திர விழாவாகும். இவை தவிர கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா, தெற்குவாசல் புனித மேரி தேவாலயத்தில் கொண்டாடப்படும் கிறித்துமசு விழா போன்றவை நகரின் பிற முக்கிய திருவிழாக்கள்.

1 கருத்து: