Translate

புதன், செப்டம்பர் 19, 2012

பாடப்புத்தகத்தை எப்படி படிப்பது?

  ஒரு பாடத்தைப் படிக்கத் தொடங்கும் முன் எந்த முறையில் படிப்பது என்பது மிகவும் அவசியம். புத்தகத்தை எடுத்தவுடன் முதல் பத்தியில் இருந்து மனப்பாடம் செய்ய ஆரம்பித்து விடக்கூடாது. கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றிப் படிக்க ஆரம்பித்தால் மிக எளிதாகக் குறுகிய நோக்கில் மனத்தில் நிலைநிறுத்திக் கொள்ளலாம்.
PQRST Method
Preview
  படிக்கப் போகும் பாடம் முழுவதையும் மேலோட்டமாக வாசிக்க வேண்டும்.
தலைப்புகளுக்கும் துணைத் தலைப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இதனால் இப்பாடம் எதைப்பற்றியது என்பது விளங்கும்.
பாடச் சுருக்கத்தை நன்றாகப் படிக்க வேண்டும். இதிலுள்ள சில வார்த்தைகளைப் படிக்கும்போது மனத்தில் கேள்விகள் எழும். (எடுத்துக்காட்டு: உயிரியலில் சைட்டோபிளாஸம் என்ற சொல்லை வாசிக்கும்போது சைட்டோபிளாலம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் வரும்.)
வினா எழுப்புதல் (Asking Questions)
  பாடச் சுருக்கத்தை வாசித்த பிறகு, பாடத்திலுள்ள தலைப்புகள் அனைத்தையும் கேள்விகளாக மாற்றி நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்வதால் அதைத் தெரிந்து கொள்வதர்கான ஆர்வம் அதிகரிக்கும்.
எதற்காக இதைப் படிக்கிறேன்? அதன் பயன் என்ன? என்பதை அறிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும். (எடுத்துக்காட்டு: அறிவியலில் மின்னாற் பகுப்பு என்ற தலைப்பை வாசிக்கும்போது மின்னாற் பகுப்பு என்றால் என்ன? என்ற கேள்வியை மனத்தில் எழுப்ப வேண்டும்.)
வாசித்தல் (Read)
  அர்த்தம் புரியும்படி கவனமாக வாசிக்க வேண்டும்.
படித்தவற்றை நமக்கு ஏற்கெனவே தெரிந்தவற்றோடு தொடர்புபடுத்தி உதாரணத்தோடு படிக்க வேண்டும்.
  புத்தகத்தில் அதிகமாக அடிக்கோடிடுவதை தவிர்க்க வேண்டும்.

  மிகவும் முக்கியமான வார்த்தைகளை மட்டும் அடிக்கோடிட வேண்டும்.
இதனால் திருப்பிப் பார்க்கும்போது குழப்பமில்லாமல் எளிதாகப் பாடத்தை நினைவிற்குக் கொண்டு வர முடியும்.

திரும்பச் சொல்லிப் பார்த்தல்
  வாசித்து முடித்தபிறகு, முக்கியமானவற்றை நினைவுக்குக் கொண்டு வந்து சொல்லிப் பார்க்க வேண்டும்.
  இம்முறையானது படித்தவற்றை நினைவில் நிறுத்திக் கொள்ள மிகச் சிறந்த வழியாகும்.
படித்தவற்றைச் சொந்த வார்த்தைகளில் சத்தமாகச் சொல்லிப் பார்க்க வேண்டும்.
  மேற்கொண்ட முறைகளைப் பின்பற்றி ஒரு பிரிவை முடித்தவுடன் அடுத்த பிரிவிற்குச் செல்ல வேண்டும்.
மாதிரித் தேர்வு எழுதிப் பார்த்தல்
  இந்த முறைகளில் பாடம் முழுவதையும் படித்து முடித்த பிறகு மாதிரித் தேர்வு எழுதிப் பார்க்க வேண்டும்.
  ஒரு முறை முதலிலிருந்து அனைத்தையும் திரும்பப் பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு தலைப்பும் எவ்வாறு மற்றவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
  கடைசியாகப் பாடச் சுருக்கத்தை இன்னொரு முறை வாசிக்க வேண்டும்.
தேர்வு எழுதும் முன் பின்பற்ற வேண்டியவை
  பதற்றம், அச்சம் ஆகியவற்றை நிதானமாய் இருந்து அகற்ற வேண்டும்.
சிலவற்றை நம்மால் நினைவுக்கு அழைக்க முடியாது. அது வராது என்ற எண்ணம் முதலில் கூடாது. முயன்றால் முடியாதது இல்லை. எனவே அச்சத்தைத் தவிர்த்துவிட்டு, இயல்பாக எப்பொழுதும் இருப்பது போல் இருக்க வேண்டும். நம்பிக்கையுடன் முழு கவனத்தையும் சக்தியையும் செலுத்தி நம் நினைவுக்குக் கொண்டு வந்தால் கண்டிப்பாக நினைவுக்கு வரும்.
    தேர்வு எழுதும் பொழுது பதற்றப்படாமல் படித்தவற்றை நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கருத்துகளை ஒன்ரோடொன்று தொடர்படுத்திக் கொண்டு படிப்பதும் ஒழுங்காகச் சிந்தித்துப் பார்ப்பதும் நினைவுக்கழைப்பதற்குப் பெரிதும் உதவும்.
   ஒரு வினாவிற்கான விடை நினைவிற்கு வராமல் போனால் அதையே நினைத்துக் கொண்டு அதனுடனே போராடிக் கொண்டு இருக்கக்கூடாது. அந்த நேரத்தில் அதைவிட்டு விட்டு மற்ற விடைகளை எழுத வேண்டும். இவை பின்பு, தானாக நினைவிற்கு வரும். அப்பொழுது எழுதிக் கொள்ளலாம்.

நினைவை மேம்படச் செய்வதற்கான வழிகள்
  கற்க வேண்டும் என்ற உறுதி வேண்டும்.
  ஆர்வமும் கவனமும் வேண்டும்.
  பொருத்தமான மனப்பாடம் செய்யும் முறைகளைக் கையாள வேண்டும்.
  தொடர்புபடுத்திக் கற்றல் வேண்டும்.
  தொகுத்தலும் சந்தமும் (Grouping and Rhythm) உபயோகிக்க வேண்டும்.
  பல புலனுணர்வுகளைப் பயன்படுத்துதல்
  சிறந்த சூழ்நிலையில் கற்க வேண்டும்.
  கற்போரைச் சார்ந்து உள்ள அகக்கூறுகள்
  போதிய அளவு ஓய்வும் மாற்றமும்
  திரும்பக் கூறலும் பயிற்சியும்.
  தேர்வுக்கு முழுவதுமாகத் தயாராகிவிட்டோம் என்று நீங்கள் உணரும் போது உங்கள்    பாடத்திட்டத்தின் கேள்வித்தாளுக்கு (இதுவரை பார்த்திராத) விடைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் எழுதிப் பார்க்கவும்.
(சென்னை பல்கலைக்கழக நாட்டுநலப்பணித்திட்டம், உளவியல் துறை ஆகியவற்றுடன் இணைந்து தினமலர், கல்விமலர் நடத்திய வெற்றிப்படிகள் வழிகாட்டுதல் நிகழ்ச்சியையொட்டி, வெளியிடப்பட்ட கையேட்டில் இருந்து...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக