Translate

திங்கள், செப்டம்பர் 03, 2012

மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெறுவதில் அரசு கல்லூரிகள் மெத்தனம்

     சென்னை: அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, ஆண்டுதோறும் கடும் இழுபறிக்குப் பின் அனுமதி பெறும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள், மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி, ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கு முன்பாக, கல்லூரிக்கு அனுமதியும், பல்கலைக்கழக அங்கீகாரமும் பெற வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மருத்துவக் கல்லூரிகள், அகில இந்திய மருத்துவக் கவுன்சிலிடமும், பொறியியல் கல்லூரிகள் அகில இந்திய பொறியியல் கவுன்சிலிடமும், சட்டக் கல்லூரிகள் பார் கவுன்சிலிடம், ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிக்கு பாரம்பரிய மருத்துவக் கவுன்சிலிடமும் விண்ணப்பித்து அனுமதி பெற்ற பிறகே, மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பது விதிமுறை.
புதுச்சேரியில் அரசு கல்லூரிகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் கடும் போராட்டத்திற்குப் பிறகே மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெறுவது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக, அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெற, அரசு பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டி உள்ளது.
முதன் முதலில், பல் மருத்துவக் கல்லூரியில் ஆரம்பித்த சிக்கல், அரசின் மெத்தனப் போக்கால் மற்ற கல்லூரிகளுக்கும் தொற்றிக் கொண்டது. மருத்துவக் கவுன்சில் அனுமதி கொடுக்க மறுத்ததையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோர்ட் வரை சென்று உத்தரவு பெற்று, அரசு மருத்துவக் கல்லூரிக்கு சேர்க்கை நடத்தப்பட்டது. இந்தாண்டும், வழக்கம் போல் கடும் இழுபறிக்குப் பிறகே, மருத்துவக் கவுன்சிலின் அனுமதி கிடைத்தது.
அந்த வரிசையில், இந்தாண்டு காலாப்பட்டு அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரிக்கும், மாகியில் உள்ள ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிக்கும் இது வரை அனுமதி கிடைக்காததால், சிக்கல் ஏற்பட்டுள்ளது. அனுமதி பெறாமலே, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு விட்டது.
அரசு சட்டக் கல்லூரியில், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்காமல், விண்ணப்பித்துள்ள மாணவர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.
தனியார் கல்லூரிகள் இந்த விஷயத்தில் படு உஷாராக உள்ளன. நவம்பர் மாதமே இதற்கான வேலையை துவக்கி விடுகின்றனர். முந்தைய ஆண்டில் சுட்டிக் காட்டிய குறைகளை உடனே நிவர்த்தி செய்து, அனுமதி பெறுவதற்கான பணிகளைக் கவனிக்க ஒரு குழுவை ஏற்படுத்தி, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்புகின்றனர். அவர்களை அங்கேயே தங்க வைத்து, அனுமதியும் பெற்று விடுகின்றனர்.
ஆனால், அரசு கல்லூரிகள் இப்படி செய்வதில்லை. பிப்ரவரி மாத கடைசியில் தான் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெறுவதற்கான பணியைத் துவக்குகின்றனர். குழுவினர் ஆய்வுக்கு வரும்போது, ஏற்கனவே சுட்டிகாட்டிய சிறிய குறைகளைக் கூட சரி செய்யாததால் அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.தனியார் கல்லூரிகளை விட அரசு கல்லூரிகள் அடிப்படை வசதியில் எந்த விதத்திலும் குறைந்ததில்லை.
அரசு கல்லூரிகள் அனைத்தும் விசாலமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. திறமைவாய்ந்த போராசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பேராசிரியர்கள், ஊழியர்கள் சம்பளம், பராமரிப்புக்காக மாதந்தோறும் ஒவ்வொரு அரசு கல்லூரிக்கும் சராசரியாக 3 கோடி ரூபாய் வரை அரசு செலவிடுகிறது.
இந்நிலையில், ஆண்டு தோறும் கடும் இழுபறிக்குப் பிறகே சேர்க்கை அனுமதி பெறுவதற்கு, அதிகாரிகளின் மெத்தனமும், அரசின் அலட்சியமுமே முக்கிய காரணம் என, பெற்றோர்களும் மாணவர்களும் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, தேவையான நிதி ஒதுக்கி, ஆய்வுக் குழுவினர் சுட்டிக் காட்டும் குறைகளை நிவர்த்தி செய்தும், போதிய உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியும், கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக