சென்னை: முதல்வர் ஜெயலலிதா கோட்டைக்குச் செல்லும் பாதையில், அவர் பார்வையில் படும்படி நின்று, தினந்தோறும் கும்பிடு போட்டு வந்த முதியவருக்கு, உரிய பரிசு கிடைத்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டனிலிருந்து, கோட்டைக்குச் செல்லும்போதும், கோட்டையிலிருந்து, போயஸ் கார்டனுக்கு வரும்போதும், ராணிமேரி கல்லூரிக்கு அருகில் நின்று, தினந்தோறும் முதியவர் ஒருவர், வணக்கம் செலுத்தி வந்தார். இதை, முதல்வரும் கவனித்து வந்துள்ளார். நேற்றும், வழக்கம்போல், ராணிமேரி கல்லூரி அருகில் நின்று கொண்டு வணக்கம் செலுத்தி உள்ளார் அந்த முதியவர். சாலையில் நின்று, தனக்கு தினமும் வணக்கம் செலுத்தும் அவரை, அழைத்து வரும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து, குண்டுக்கட்டாகத் தூக்கப்பட்ட அந்த நபர், போயஸ் கார்டனுக்கு கொண்டுசெல்லப்பட்டார். "என்ன ஆகுமோ... ஏதாகுமோ...' என, அஞ்சி நடுங்கியபடி, முதல்வரை சந்தித்துள்ளார் அந்த முதியவர். அவரிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா, "உங்களுக்கு என்ன வேண்டும்... தினமும் சாலையில் நின்றுகொண்டு, நான் வரும்போதும், போகும்போதும் வணக்கம் செலுத்துறீங்களே' என, அன்போடு விசாரித்து உள்ளார். அதற்கு அந்த முதியவர், "மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளேன். அன்றாட ஜீவனத்துக்கே கஷ்டப்படுகிறேன். என் மகனுக்கு ஒரு வேலை கொடுத்தால், பிழைத்துக் கொள்வேன்' என, கூறியுள்ளார். அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வர், "உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, சொல்லி அனுப்பி உள்ளார். முதல்வரை சந்தித்த பிரமிப்பே விலகாத நிலையில், தனது கோரிக்கையும் நிறைவேறிய மகிழ்ச்சியோடு அந்த முதியவர் புறப்பட்டு உள்ளார்.
முதல்வரால் அழைக்கப்பட்ட நபர் குறித்து போலீசார் கூறியதாவது: செங்கல்பட்டைச் சேர்ந்த அந்த நபரின் பெயர் ஆறுமுகம்,72. சென்னை ராதாகிருஷ்ணன் சாலை அருகே வசித்து வருகிறார். அவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. மகன் பட்டப்படிப்பு படித்துள்ளார். மகனுக்கு வேலை வேண்டும் என, கேட்டார். அவரிடம், நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்து உள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Courtesy-Dinamalar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக