Translate

வியாழன், செப்டம்பர் 27, 2012

தண்ணீரில் தத்தளிக்குது அசாம்: முதல்வரோ ஜப்பானில் முகாம்


கவுகாத்தி: அசாமில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கால், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், தண்ணீரில் தத்தளித்து வரும் நிலையில், முதல்வர் தருண் கோகோய், வரி விதிப்பு முறை குறித்து ஆய்வு செய்வதற்காக, ஜப்பானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அசாமில், 10 நாட்களுக்கும் மேலாக, பலத்த மழை கொட்டுகிறது. பிரம்மபுத்ரா மற்றும் அதன் துணை நதிகளில், இதுவரை இல்லாத அளவுக்கு, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 15 மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், வீடுகளை இழந்து, தண்ணீரில் தத்தளிக்கின்றனர். வெள்ளப் பெருக்கிற்கு, இதுவரை 18 பேர், பலியாகியுள்ளனர்; பலரை காணவில்லை. உணவு, உடை, தங்குமிட வசதி போன்ற, அத்தியவாசிய தேவைகள் கிடைக்காமல், மக்கள் திண்டாடுகின்றனர். பிரதமர் மன்மோகன் சிங், வெள்ள பாதிப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளார். தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண படையினர், மீட்பு பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும், சம்பவ இடத்தில் முகாமிட்டு, மீட்பு பணிகளை விரைவு படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர் தருண் கோகோய், ஆறு நாள் சுற்றுப் பயணமாக, ஜப்பான் சென்றுள்ளார். வரி விதிப்பு முறைகள், ஜப்பானில் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக, மாநில நிதி அமைச்சக அதிகாரிகளுடன், அவர் ஜப்பானுக்கு சென்றுள்ளார்.

இதற்கு, அசாமில் எதிர்க்கட்சிகளாக உள்ள, அசாம் கன பரிஷத், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. "மாநில மக்கள் வெள்ளத்தில் மிதக்கும்போது, முதல்வர், ஜப்பானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பது, ஆச்சர்யம் அளிக்கிறது'என, அவர்கள் தெரிவித்துள்ளனர். அசாம் முதல்வர் தருண் கோகோய், கடந்த, 16 மாதங்களில், இதுவரை, ஏழு முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளார். சமீபத்தில், அசாமில் வசிக்கும் போடோ பழங்குடியினருக்கும், வங்கதேசத்திலிருந்து குடிபெயர்ந்து வந்த, சிறுபான்மை இனத்தினருக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தின்போதும், தருண் கோகோய், வெளிநாடு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக