தொடர்ச்சியாகப் படித்துக் கொண்டிருக்கையில், இடையில் ஒரு வருடம் இடைவெளி
விழுதல் என்பது பல மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயம்தான். ஆனால்,
அதற்கான காரணம்தான் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.
மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை, ஒரு மாணவரின் கல்வி இடைவெளி என்பது, கலாச்சார அறிவை வளர்த்துக் கொள்ளவும், பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யவும், உலகின் பல இடங்களில் பணிபுரியவும் பயன்படுகிறது. ஆனால் இந்தியாவிலோ காரணங்கள் வேறு.
ஒரு வருட இடைவெளி என்பது தவறில்லை. ஆனால் அந்த காலகட்டத்தில், சவால்களை மதிப்பிட்டு, மிகத் தெளிவான ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
இடைவெளி வருடம் என்பது 2 முக்கிய காரணங்களுக்கானது என்பதாக வகைப்படுத்தப்படுகிறது,
அதில் ஒன்று, வாழ்வில் என்னவாக ஆகப் போகிறோம் என்பதை தீர்மானம் செய்வது. இன்னொன்று, தங்களின் தொழிலைப் பற்றி ஒரு தெளிவான பார்வை மற்றும் அறிவைப் பெறுவது.
இளநிலை அல்லது முதுநிலை ஆகியவற்றில் எதைப் படிக்கும்போதும், இது நிகழலாம். சில நேரங்களில் பட்டப் படிப்பை முடித்தப்பிறகான காலகட்டத்தில், தங்களுக்கான எதிர்கால வேலையை தேர்வு செய்வதில் சிலருக்கு குழப்பம் நேரலாம் மற்றும் துறையை மாற்ற விரும்பலாம். சில மாணவர்கள் ஐஐடி-ஜேஇஇ தேர்வை மீண்டும் எழுதுவதையும்கூட காணலாம். ஏனெனில், அவர்கள் விரும்பிய வளாகம் அல்லது பாடப்பிரிவு கிடைக்காது இருக்கலாம்.
ஒரு வருட இடைவெளி என்பது நமது வாழ்க்கைப் பயணத்தை ஒன்றும் தடுத்துவிடாது என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, ஒவ்வொரு மாணவரும், சிறந்த கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டும் என்றே ஆசைப்படுவர். அதன்மூலம், நல்ல வேலைவாய்ப்பை பெறுவது அவர்களின் லட்சியமாக இருக்கும். எனவே, இதுபோன்ற லட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு, நுழைவுத்தேர்வுகளை எழுதுவது அல்லது பள்ளி மேல்நிலைப் படிப்பில், மதிப்பெண் குறைந்திருந்தால், அதை உயர்த்திக்கொள்ள Improvement எழுதுவது போன்ற பணிகளை செய்யலாம்.
தெளிவு
18 வயதையடைந்த, குறைந்தளவிலான மாணவர்களே, தாங்கள் எந்தப் பாடத்தை படிக்க விரும்புகிறோம் என்ற தமது விருப்பத்தை அறிந்துள்ளார்கள். அங்ஙனம் அறியாதவர்களுக்கு, இந்த இடைவெளி வருடமானது, சரியான விருப்பத்தை தேர்வுசெய்ய உதவும். அதேசமயம், இந்த இடைவெளி வருடத்தில் எடுக்கப்படும் முடிவானது தெளிவாகவும், உறுதியாகவும் இருத்தல் வேண்டும். இருந்தாலும் இருக்கலாம் என்பது போன்று இருக்கக்கூடாது.
LLB படிப்பு தொடர்பானவை
சட்ட மாணவர்களைப் பொறுத்தவரை, LLB படிப்பில் அட்மிஷன் பெற்றபிறகு, இடைவெளி வருடம் என்பது பொதுவான ஒன்றாக இருக்கிறது. டெல்லியைப் பொறுத்தளவில், 30% மாணவர்கள், பள்ளிப்படிப்பை முடித்தப்பிறகு, LLB தேர்வுக்கு தயாராக, 1 வருட இடைவெளி எடுக்கின்றனர். ஏனெனில், அறிவியல் பிரிவில் படித்த பல மாணவர்கள் சட்டப் படிப்பை மேற்கொள்ள நினைக்கின்றனர். ஆனால், சட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் அவர்களுக்கு கடினமாக இருக்கின்றன. இதுபோன்ற சூழல்களில் தேர்ச்சி விகிதமும் அதிகமாக உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.
LLB படிப்பில் சேர்க்கைபெறும் பல மாணவர்கள், UPSC, CS, Bank PO or SSB போன்ற தேர்வுகளுக்கும் தயாராகிறார்கள்.
சிக்கல்கள்
இடைவெளி வருடம் விடும் மாணவர்களுக்கு கல்விக்கடன் விஷயத்தில் சிக்கல் உள்ளது. இந்தவகை மாணவர்கள், கல்விக் கடனுக்காக வங்கிகளை நாடும்போது, வங்கிகள் தயங்குகின்றன. எனவே, வலுவான காரணங்கள் இல்லாமல், தேவையற்ற இடைவெளியை தவிர்க்கவும்.
இதைத்தவிர, கல்வி நிறுவனத்தில் இடம் பெறுவதிலும், பணிவாய்ப்புகளை பெறுவதிலும், இடைவெளி விடும் மாணவர்கள் பின்னேற்றத்தை சந்திக்கலாம் எனவும் சிலர் எச்சரிக்கிறார்கள். ஏனெனில் சில கல்வி நிறுவனங்கள், இடைவெளி விடும் மாணவர்களை சீந்துவதில்லையாம். எனவே, இடைவெளிக்குப் பதிலாக, நமக்கு விருப்பமான முதுநிலைப் படிப்பை மேற்கொள்ளலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சில நிறுவனங்கள் வளாகத் தேர்வுக்கு செல்கையில், ஒரு மாணவர் தனது இடைவெளி வருடத்தில் என்ன செய்தார் என்று கேட்கின்றன. ஏதேனும் குறுகியகால படிப்புகள் அல்லது வேலை செய்தாரா போன்ற சரியான காரணங்களை எதிர்பார்க்கின்றன. சரியான காரணங்கள் இல்லையெனில் அந்த மாணவர் நிராகரிக்கப்படுகிறார்.
பெற்றோர் மற்றும் உறவினர் ஆதரவு
நுழைவுத் தேர்வுகள் போன்றவற்றுக்கு தயாராகும் இடைவெளி காலத்தில் பெற்றோரின் ஆதரவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பெற்றோரின் ஆதரவு என்பது, வருட இடைவெளி விடும் ஒரு மாணவர் சாதிப்பதற்கான ஒரு மிகப்பெரிய உந்துதல். மேலும், சரியான வழிகாட்ட தெரிந்த பெற்றோராக இருந்தால், இன்னும் கூடுதல் பலம்.
பல பெற்றோர்கள் விபரம் புரியாமல், தங்களை சுற்றியிருப்பவர்கள் சொல்வதைக் கேட்டு பயப்படுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, 1 வருடம் வீணாகிறதே என்கிற கவலை. எனவே, வருட இடைவெளி எண்ணமிருக்கும் மாணவர்கள், தங்கள் பெற்றோரிடம் இதுகுறித்து தெளிவாகப் பேசி, அவர்களுக்கு புரிந்துணர்வை வழங்கி, அவர்களின் ஆதரவைப் பெற வேண்டும்.
பயிற்சி வகுப்புகள்
இடைவெளி வருடத்தில், நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும்போது, ஒரு மாணவர், தனக்கு கோச்சிங் வகுப்புகள் தேவை என்றுறு நினைத்தால் அதை வைத்துக்கொள்வதில் தவறில்லை. உதாரணமாக, பள்ளி மேல்நிலைப் படிப்பில் கணிதப்பாடம் படிக்காத ஒரு மாணவர், ஐஐஎம் -ல் எம்பிஏ சேர விரும்பினால், பகுப்பாய்வு மற்றும் திறனாய்வு தொடர்பாக அவருக்கு பயிற்சி தேவைப்படலாம். அதேசமயம், ஒரு நல்ல பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதும் முக்கியமானது. இல்லையெனில், காலமும், பணமும் வீண்.
கோச்சிங் வகுப்புகள் இல்லாமலேயே, அதனுடைய மெட்டீரியல்களை வைத்து தாமாகவே படித்துக்கொள்ளும் ஒரு முறையும் உண்டு. அதேசமயத்தில், சற்று கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும். சிலருக்கு கோச்சிங் வகுப்புகள் செல்வது கூடுதல் நம்பிக்கையை கொடுக்கும்.
இறுதியாக...
ஒருவருக்கு ஒரு லட்சியம் இருந்தால், அதிலேயே கவனம் செலுத்தி சாதிக்க முயல வேண்டும். லட்சியத்தில் தெளிவும் இருக்க வேண்டும். இடைவெளி வருடமானது, தெளிவு பெறுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு.
அதேசமயம், ஒரு மாணவர் தான் இதுவாகத்தான் ஆவேன் என்ற உறுதியான திட்டம் எதுவுமின்றி, கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்வேன் என்ற மனநிலையில் உள்ளனர். இதுவும் ஒருவகையில் நன்றே. ஏனெனில், எந்த ஒரு செயலுக்கு அதற்கேற்ற பலன் நிச்சயம் உண்டு. எனவே, ஒரு வருடத்தை வீணாக்க வேண்டிய அவசியமில்லை என்றும் சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஒரு மாணவர், தனது திறமை பற்றியும், நடைமுறை சாத்தியக்கூறுகள் பற்றியும் தெளிவானப் புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். மாணவர்கள் தங்களுக்குள் தேவையற்ற கற்பனைகளை வைத்துக்கொள்ளக்கூடாது. வெறும் நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது மட்டுமே வாழ்க்கையின் சாதனையல்ல. தெளிவான சிந்தனையும், லட்சியமும், சமூக சீர்திருத்த நோக்குமே வாழ்வின் சிறப்புகள் என்பதை உணர வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக