Translate

சனி, செப்டம்பர் 15, 2012

வெளிநாடுவாழ் இந்திய தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் விரைவில் அறிமுகம்: வயலார் ரவி

பெங்களூர், செப்.15: வெளிநாடுவாழ் இந்திய தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய வெளிநாடுவாழ் இந்தியர் விவகாரங்கள்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் இந்தியத்தொழிலாளர்களின் நலன்கருதி மகாத்மாகாந்தி வெளிநாடுவாழ் இந்தியதொழிலாளர் பாதுகாப்பு திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இது குறித்து விவாதிப்பதற்காக இந்திய தூதர்களின் ஆலோசனைக்கூட்டம் செப்.17ம் தேதி புதுதில்லியில் நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அடிப்படையான விஷயங்கள் குறித்து ஆழமாக ஆராயப்படும். தகுதியான பாஸ்போர்ட் பெற்று, அந்தந்த நாடுகளின் உரிமம் பெற்ற தொழிலாளர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடைய முடியும். பணி ஓய்வுபெற்ற பிறகு இந்தியா திரும்பும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு நிதி மற்றும் ஓய்வூதியம் வழங்க இந்த திட்டம் வழிவகுக்கும். இந்த திட்டம் தொடர்பான அறிவிப்புகள் செப்.17ம் தேதி வெளியிடப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக